2018-07-14 15:46:00

புலம்பெயர்ந்தவர் குறித்த முதல் உலகளாவிய ஒப்பந்தம்


ஜூலை,14,2018. உலக அளவில் இடம்பெறும் புலம்பெயர்வைச் சிறப்பாக கையாள்வதற்கும், அந்நிகழ்வால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கும், புலம்பெயர்ந்தவரின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், நீடித்த வளர்ச்சிக்கு உதவுவதற்குமென, ஐ.நா. உறுப்பு நாடுகள் முதல் முறையாக ஒப்பந்தம் ஒன்றை இவ்வெள்ளிக்கிழமையன்று அமைத்துள்ளன

இந்த ஒப்பந்தத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள, ஐ.நா.பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரெஸ் அவர்கள், இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்றும், அரசுகளின் புரிந்துணர்வை இது காட்டுகின்றது என்றும் கூறினார்.

மேலும், வருகிற டிசம்பர் 10,11 ஆகிய நாள்களில் Marrakeshல் நடைபெறும் ஐ.நா. உறுப்பு நாடுகளின் கூட்டத்தில், இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அமலுக்கு வரும் என, உலகளாவிய புலம்பெயர்வுக்குரிய சிறப்பு பிரதிநிதி, Louise Arbour அவர்கள் கூறினார்.  

மேலும், இந்த உலகளாவிய ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள, ஐ.நா.வின் சிறார் நல அமைப்பான யுனிசெப் இயக்குனர், Henrietta Fore அவர்கள், இது, உலக அளவிலுள்ள ஏறத்தாழ ஐந்து கோடி புலம்பெயர்ந்த சிறார் எதிர்கொள்ளும் சவால்களைக் களைவதற்கு உதவும் எனக் கூறியுள்ளார்.

புலம்பெயரும் மக்களை நன்றாக நிர்வகிக்கவும், இந்த ஒப்பந்தம் உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ள Fore அவர்கள், வருகிற டிசம்பரில் Marrakeshல் நடைபெறும் கூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார்.

ஆதாரம் : UN/வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.