2018-07-11 15:22:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : தூர்ஸ் நகர் புனித மார்ட்டின்


ஜூலை,11,2018. தூர்ஸ் நகர் ஆயரான புனித மார்ட்டின், கிறிஸ்தவத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விசுவாசிகளால் மிகவும் விரும்பப்படுகின்ற புனிதர்களில் ஒருவர். இஸ்பெயின் நாட்டின் சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லாவிலுள்ள, திருத்தூதர் யாகப்பரின் திருத்தலத்திற்குச் செல்லும் திருப்பயணிகள், பிரான்ஸ் நாட்டின் தூர்ஸ் நகரிலுள்ள இப்புனிதரின் திருத்தலம் சென்று செபித்து, பின்னர்தான், தங்களின் திருப்பயணத்தைத் தொடருகின்றனர். இவர், ஹங்கேரி நாட்டு Pannonia (தற்போது Szombathely)வில், பிறந்து, தனது பெரும்பாலான குழந்தைப்பருவத்தை, இத்தாலி நாட்டின் பவியா நகரிலும், வயது வந்த காலத்தை, பிரான்ஸ் நாட்டிலும் செலவழித்தவர். இதனால் இவர் ஐரோப்பாவின் ஆன்மீகப் பாலமாக கருதப்படுகிறார். இப்புனிதர் காலத்தில் வாழ்ந்த சுல்பிசியுஸ் செவெரியுஸ் என்பவர், இவரின் வாழ்க்கை விவரங்களை எழுதியுள்ளார். அதிலிருந்தே இவரின் வாழ்வு பற்றி அதிகம் அறிய வருகிறோம். தூர்ஸ் நகர் புனித மார்ட்டின் என்றாலே, குதிரையில் செல்லும் இராணுவ வீரராக, தனது மேலாடையை, வாளால் இரண்டாகக் கிழித்து, சாலையோரத்தில் குளிரில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒருவருக்குக் கொடுத்த காட்சியே படங்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும். இவர் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றியதற்கு இந்நிகழ்வு முக்கிய காரணமாக அமைந்தது. அச்சமயம், இவர், உரோமைப் பேரரசில் படைவீரராகச் சேர்ந்து, தற்போதைய பிரான்ஸின் Gaul நகரில் தங்கியிருந்தார்.

புனித மார்ட்டின் மேலாடையைக் கிழித்துக்கொடுத்தல்

ஒருசமயம், தூர்ஸ் நகர் புனித மார்ட்டின், குதிரையில் அமியேன் நகரின் வாயிலை நெருங்கிக் கொண்டிருந்தவேளையில், அரைகுறையாக ஆடை அணிந்திருந்த ஓர் இரவலர் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். உடனேயே, அவர், தான் போர்த்தியிருந்த மேலாடையை இரண்டாக வெட்டிக் கிழித்தார். ஒரு பாதியை அந்த இரவலரிடம் கொடுத்து போர்த்திக்கொள்ளச் சொன்னார். மறுபாதியை, தன் தோளைச் சுற்றிப் போட்டுக் கொண்டார். அன்று இரவு மார்ட்டின் இயேசுவை கனவில் கண்டார். அன்று, வழியோரத்தில் ஓர் இரவலருக்குத் தான் கொடுத்திருந்த ஆடையை இயேசு அணிந்திருந்தார். அப்போது இயேசு தம்மைச் சூழ்ந்து நின்ற வானதூதர்களை நோக்கி, "இதோ இங்கே நிற்பவர்தான் மார்ட்டின். இவர் இன்னும் திருமுழுக்குப் பெறவில்லை. ஆனால் நான் போர்த்திக்கொள்வதற்குத் தன் ஆடையை வெட்டி எனக்குத் தந்தவர் இவரே" என்று கூறினார். இக்காட்சியைக் கண்ட மார்ட்டின் பெரும் வியப்புற்றார். இந்நிகழ்ச்சி வேறொரு வடிவத்திலும் சொல்லப்படுகிறது. அதாவது, மார்ட்டின் துயில் கலைந்து எழுந்ததும் தன் மேலாடையைப் பார்த்தார். அது ஒரு பாதித் துண்டாக இல்லாமல் அற்புதமான விதத்தில் முழு மேலாடையாக மாறிவிட்டிருந்தது. இயேசுவைக் கனவில் கண்ட மார்ட்டின் உள்ளத்தில் திடம் கொண்டவரானார். தான் எப்படியாவது உடனடியாகக் கிறிஸ்தவத்தைத் தழுவ வேண்டும் என்று முடிவுசெய்தார். தனது 18ம் வயதில் மார்ட்டின் கிறிஸ்தவத்தில் திருமுழுக்குப் பெற்றார்.

தூர்ஸ் நகர் புனித மார்ட்டின் அவர்கள், உரோமைப் பேரரசின் இராணுவத் துறையில் போர்வீரராக மேலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அந்நாள்களில் அவர் நேரடியாகச் சண்டையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாறாக, இவர் உரோமைப் பேரரசருக்குப் பாதுகாப்பு அளிக்கும் வீரர் குழுவில் இருந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. உரோமைப் படைகள், கால் மாநிலத்தின் Borbetomagus (இன்றைய ஜெர்மனியில் உள்ள Worms) எனுமிடத்தில் போரிட வேண்டிய  சூழ்நிலை எழுந்தது. அச்சமயத்தில் மார்ட்டின் திருமுழுக்குப் பெற்றிருந்ததால், தான் சண்டையில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்தார். "நான் கிறிஸ்துவின் படைவீரன். எனவே, நான் போரிடுவது முறையல்ல" என்று பேரரசரிடம் துணிச்சலாகச் சொன்னார். அப்போதைய பேரரசன் ஜூலியன் கிறிஸ்தவத்திற்கெதிராய் இருந்தவன். மார்ட்டின் சண்டையில் பங்கேற்பதில்லை என்று கூறியது, அவருடைய கோழைத்தனத்தைத்தான் காட்டுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டு,  அவரைச் சிறையில் அடைத்தார்கள். அவர்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த மார்ட்டின், தான் ஆயுதம் தாங்கிப் போரிட்டு யாரையும் காயப்படுத்தவோ கொல்லவோ போவதில்லை என்றும், யாதொரு ஆயுதமும் இன்றி படையின் முன்னணியில் செல்லத் தயார் என்றும் சவால் விட்டார். அச்சவாலை மார்ட்டின் அவர்களின் படைத் தலைவர்கள் ஏற்க முன்வந்தனர். ஆனால், அச்சமயத்தில், உரோமைப் படையை எதிர்த்துவந்த எதிரிகள், போரிடும் திட்டத்தைக் கைவிட்டு, அமைதி உரையாடலுக்கு முன்வந்தனர். இவ்வாறு, மார்ட்டின் ஆயுதமின்றி எதிரிகளின் படையைச் சந்திக்கப் போவதாகக் கூறியது நிறைவேறாமல் போயிற்று. ஆயினும், அதிகாரிகள் மார்ட்டினுக்குப் படைப் பிரிவிலிருந்து பணி விடுதலை கொடுத்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. .

ஆரியனிச அச்சறுத்தல்

மார்ட்டின் அவர்கள், மிகவும் ஞானமுள்ள மற்றும் பக்தியுள்ள ஆயரான புனித ஹிலரி அவர்களின் சீடராக மாறுவதற்கு Politiers  சென்றார். அச்சமயத்தில் ஆரிய தப்பறைக் கொள்கை பரவி வந்தது. இயேசு உருவாக்கப்பட்டவர், இறைத்தந்தையைவிட குறைவான மதிப்புடையவர் என ஆரியனிசத்தைப் பின்பற்றியவர்கள் பரப்பி வந்தனர். இது, உண்மையான மூவொரு கடவுள் கோட்பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. Politiers நகர் புனித ஹில்லரி அவர்கள் ஆரியனிசத்தை எதிர்த்ததால், ஆரியனிசத்திற்கெதிரான சுத்தியல் என்ற புனைப்பெயர் அவருக்கு இருந்தது. பின்னாளில், சில ஆரியனிசக் கொள்கையாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதால், புனித ஹில்லரி அவர்கள், அவ்விடத்தைவிட்டு கட்டாயமாக வெளியேறி, ஆசியா மைனரிலுள்ள பிரிஜியா சென்றார். அங்கே, உண்மையான கிறிஸ்தவக் கோட்பாட்டுக்கு ஆதரவளித்த புனித அத்தனாசியுஸ் மற்றும் ஏனையோருடன் இணைந்தார் அவர். அதேநேரம் மார்ட்டின் இத்தாலி சென்றார். அங்கே ஆரியனிசக் கொள்கையாளர்கள், மார்ட்டினுக்குத் தொல்லை கொடுத்தார்கள். அதே கொள்கையைப் பின்பற்றிய மிலான் பேராயர் Auxentius, மார்ட்டினை அந்நகரைவிட்டு வெளியேற்றினார். அதனால் மார்ட்டின், அல்பெங்கா என்ற தீவுக்குச் சென்று துறவியாக வாழ்ந்தார். அத்தீவு, தற்போது இத்தாலியின் சன்ரேமோ மற்றும் ஜெனோவாவுக்கு இடையில் உள்ளது.     

புனித மார்ட்டின் தூர்ஸ் நகர் திரும்புதல்

361ம் ஆண்டில் புனித ஹில்லரி, Politiers நகருக்குத் திரும்பியதும், மார்ட்டினும் அவரோடு இணைந்தார். அந்நகருக்கு அருகில் Liguge எனுமிடத்தில், புனித பெனடிக்ட் துறவு இல்லத்தை நிறுவினார் மார்ட்டின். அங்கிருந்துகொண்டு, கால் பகுதியின் மேற்கே நற்செய்தியை அறிவித்தார். 371ம் ஆண்டில், இறந்துகொண்டிருந்த ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு இணங்கி, மார்ட்டின் தூர் நகருக்குச் சென்றார். பின்னர் தூர் நகரின் ஆயரானார். உடனடியாக, Druidic சமயக் கோவில்களை அழித்தார். புனித மரங்கள் எனக் கருதப்பட்டவைகளை இவர் வெட்டத் தொடங்கியபோது, மக்கள் அவரை எதிர்த்தனர். அதனால் அவர் Loire நகரின் எதிர்ப்புறத்திலுள்ள இடத்தில் துறவு இல்லத்தை ஆரம்பித்தார். இவரின் கடும்துறவைக் கண்ட பலர் அவரின் சீடரானார்கள்.

இஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பிரிசில்லியன் என்ற கிறிஸ்தவ ஆழ்நிலை தியான துறவி, கிறிஸ்தவர் என்பவர் கடவுளோடு தொடர்ந்து உறவுடன் இருக்க வேண்டும், அவர் திருமணத்தைத் துறக்க வேண்டும் எனப் போதித்தார். சரகோசாவில் நடைபெற்ற பொதுச்சங்கம் இவரைக் கண்டித்தது. உடனே இஸ்பெயினிலிருந்து இதாசியுஸ் என்ற ஆயர் Trier நகருக்கு விரைந்துவந்து, பேரரசர் மாக்சிமுசிடம், துறவி பிரிசில்லியனைக் கண்டிக்குமாறு வலியுறுத்தினார். அதேநேரம் மார்ட்டினும் அங்குச் சென்று, பேரரசர் மாக்சிமுசிடம், அந்தத் துறவி மீது இரக்கம் காட்டுமாறு கேட்டுக்கொண்டார். மார்ட்டினிடம் ஒப்புக்கொண்ட பேரரசர், அவர் சென்றவுடன், பிரிசில்லியன் மற்றும் அவரைப் பின்பற்றியவர்களைத் தலைவெட்டி கொலை செய்யுமாறு ஆணையிட்டார். 385ம் ஆண்டில் இது நடைபெற்றது. தப்பறைக்கொள்கைக்காக தலைவெட்டப்பட்ட முதல் கிறிஸ்தவர்கள் இவர்கள். இதையறிந்த மார்ட்டின் மிகவும் வருந்தினார். இதனால் இஸ்பெயின் ஆயரோடு பேசுவதை நிறுத்தினார். ஆயினும், பேரரசர் மாக்சிமுசின் தலையீட்டின்பேரில் பின்னர் இஸ்பெயின் ஆயருடன் பேசினார் மார்ட்டின்.

புனித மார்ட்டின் புகழ்

ஹங்கேரி நாட்டில் 316ம் ஆண்டில் பிறந்த புனித மார்ட்டின், 397ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இறைபதம் எய்தினார். பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலரான தூர்ஸ் நகர் புனித மார்ட்டின் விழா நவம்பர் 11ம் நாளன்று சிறப்பிக்கப்படுகின்றது. cappellanu என்ற அருள்பணியாளர், இப்புனிதரின் மேலாடையைப் பாதுகாப்பாக வைத்திருந்தார். எனவே, இராணுவத்திற்கு ஆன்மீகப் பணியாற்றும் அனைத்து அருள்பணியாளர்களும் cappellani என அழைக்கப்பட்டனர். இதற்கு பிரெஞ்சு மொழியில் chapelains என்பதாகும். ஆங்கிலத்தில் chaplain எனப்படுகிறது. இவரின் புனிதப்பொருளுக்காகக் கட்டப்பட்ட சிறிய ஆலயங்களை மக்கள், "capella" என்றே அழைத்தனர். பின்னாளில் சிற்றாலயங்களுக்கு "chapels" என்பது இதிலிருந்து மருவி வந்ததாகும். மத்திய காலத்தில் புனித மார்ட்டின் அவர்களின் மேலாடை புனிதப்பொருளாக நோக்கப்பட்டு, அரசர்கள் போருக்குச் சென்றபோது அதை எடுத்துச் சென்றனர். அந்த அளவுக்கு இப்புனிதரின் வாழ்வு அமைந்திருந்தது. 

நான் கிறிஸ்துவின் படைவீரன். எனவே, போரிடுவது முறையல்ல என்ற புனித மார்ட்டின் அவர்களின் துணிச்சல், கிறிஸ்தவர்களுக்கு ஒரு சவால். 

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.