2018-07-09 15:32:00

இமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது


அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள தியேல் அறக்கட்டளையின்(Thiel Foundation) 2018ம் ஆண்டிற்கான தியேல் பெல்லோஷிப் (Thiel Fellowship) விருதைப் பெற்ற, பிளாக்செயின் தொழில்முனைவர் நான்கு பேரில் சென்னையைச் சேர்ந்த 21 வயது மாணவி அபர்ணா கிருஷ்ணன் (Aparna Krishnan) அவர்களும் ஒருவர். இரகசிய குறியீடுகள் மற்றும் நாணயங்கள் தொடர்பான பிளாக்செயின் (Blockchain Entrepreneurs) தொழில்முனைவர் கிளப்பில் முன்னோடியாகத் திகழ்ந்த அபர்ணா அவர்கள், இந்த தொழில் நுட்பத்தை மாணவர்கள் மற்றும் நிறுவனங்களிடம் பிரபலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும், இரகசிய குறியீடு மற்றும் பொருளாதார ஆராய்ச்சி முதல் சோதனை நிலையத்தின் (Mechanism Lab) துணை நிறுவனரும் இவர். ஓமன், மெக்சிகோ, இந்தியா, ஹாங்காங் மற்றும் அமெரிக்காவில் பிளாக்செயின் பயிற்சி அளித்துள்ளார் இவர். தற்போது தியேல் அறக்கட்டளை தோழமை விருதைப் பெறுவதன் வழியாக, உலகின் தலைசிறந்த இரகசிய குறியீடு நிபுணர்கள் வரிசையில் இடம் பெறுகிறார் அபர்ணா. இளம் வயதிலேயே நிறுவனங்களைத் தொடங்கவும், சிறந்த பெரிய வழிமுறைகளைக் கண்டறியவும் திறமையுள்ள இளையோரை ஊக்குவிக்கும் வகையில், இந்த பெல்லோஷிப் விருது வழங்கப்படுகிறது. சென்னையிலும், மும்பையிலும் இளமைக் காலத்தை கழித்த அபர்ணா, கணிதத்தில் ஆர்வம் கொண்டவர். உலக அளவில் நடைபெற்ற பல போட்டிகளில் பங்கேற்றுள்ளார்; மேலும் படிப்பில் மட்டுமல்லாமல், விளையாட்டுத் துறையிலும் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளார் அபர்ணா.

பேபால்(PayPal) நிறுவனத்தின் இணை நிறுவனரும், முகநூல் அமைப்பின் துவக்க கால முதலீட்டாளருமான பீட்டர் தியேல் என்ற கோடீஸ்வரரின் ஆதரவுடன், ஒரு தனியார் அறக்கட்டளையாக, தியேல் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இதன் விருதைப் பெறுபவர்களுக்கு, ஒரு இலட்சம் டாலர் உதவித் தொகையும், தியேல் அறக்கட்டளையைச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், அறிவியலாளர்கள் போன்றோரின் வழிகாட்டுதலும் இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும்.

ஆதாரம் : தினமலர்/வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.