2018-07-07 14:17:00

இமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை


பிரமிக்கத்தக்க தொழில் நுட்பங்களால், நம்மிடையே தகவல் பரிமாற்றங்கள் தாறுமாறாகப் பெருகிவிட்டன. நம்மை வந்தடையும் ஒரு தகவலை உள்வாங்கி, அதில் உள்ள உண்மையையும், அதனால் விளையக்கூடிய நன்மை, அல்லது, தீமையையும் குறித்து சிறிதும் சிந்திக்காமல், அதை உடனே மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற அவசரம், நம்மிடம் அதிகம் உள்ளதோ என்ற கவலை எழுகிறது. இத்தகைய அவசரப் பரிமாற்றங்களால், வதந்திகள் அதிகம் உருவாகின்றன.

ஒரு சில வேளைகளில், பொறுப்பின்றி நாம் பரப்பும் வதந்திகளால், உயிர் பலிகளும் நிகழ்ந்துள்ளன. அண்மைய சில மாதங்களில், 'வாட்ஸப்' வதந்திகளால், இந்தியாவில், 30க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தர்மம் கேட்டு வந்த சில அப்பாவி மக்களை, குழந்தைகளைக் கடத்துபவர்கள் என்ற தவறான முடிவெடுத்து, அந்த வதந்தியைப் பரப்பியதால், அந்த அப்பாவி மக்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளனர். இதில் மற்றொரு வேதனை என்னவென்றால், திரிபுரா மாநிலத்தில், குழந்தைக் கடத்தல் வதந்திகளை நம்பவேண்டாம் என்று கூறச்சென்ற அரசு அதிகாரி ஒருவரையும், மக்கள் எரித்து கொன்றனர் என்று, நம் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

'வாட்ஸப்' வலையில் சிக்கித்தவிக்கும் இளையோர், விரைவில் விடுதலை பெறவேண்டும்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.