2018-07-05 16:15:00

பாரி நகர் சந்திப்பு குறித்து முதுபெரும்தந்தை 2ம் Tawadros


ஜூலை,05,2018. நாம் எழுப்பும் வேண்டுதல்கள், நம் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் வலிமை பெற்றவை என்ற மனநிலையுடன் இத்தாலியின் பாரி நகரில் நடைபெறவிருக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டில் தான் கலந்துகொள்ளச் செல்வதாக காப்டிக் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை இரண்டாம் Tawadros அவர்கள் கூறினார்.

ஜூலை 7ம்தேதி, இச்சனிக்கிழமையன்று, பாரி நகருக்கு ஒரு நாள் திருப்பயணத்தை மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நகர் கடற்கரையின் திறந்தவெளி அரங்கில், விசுவாசிகளோடும், கிறிஸ்தவ சமூகத் தலைவர்களோடும், பிற கிறிஸ்தவ சபைகளின் முதுபெரும் தலைவர்களோடும் இணைந்து, உலக அமைதி வேண்டி செபவழிபாடு ஒன்றை நடத்துகிறார்.

இந்த செப வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு பெற்றுள்ள முதுபெரும்தந்தை இரண்டாம் Tawadros அவர்கள், Sir என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அமைதியிலும், ஒப்புரவிலும் வளர்வதற்கு இந்தச் சந்திப்பு பெரிதும் உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

மத்தியக் கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவம் மிக ஆழமாக வேரூன்றியிருப்பதால், செபம், மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய கிறிஸ்தவ விழுமியங்கள், தங்கள் எதிர்காலத்தை வழிநடத்தும் என்று முதுபெரும்தந்தை எடுத்துரைத்தார்.

மத்தியக் கிழக்குப் பகுதி நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சனைகளில் அந்நிய நாடுகள் தலையிட வேண்டாம் என்றும், அந்தந்த நாட்டின் பிரச்சனைகளை, உரையாடல், ஒப்புரவு ஆகிய வழிகளில் தீர்த்துக்கொள்ள அந்தந்த நாடுகளுக்கு திறமைகள் உள்ளதென்றும் முதுபெரும்தந்தை Tawadros அவர்கள், தன் பேட்டியில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.