2018-07-05 15:12:00

இமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி


துபாய் நகரில், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய, பத்து வயது சிறுவனுக்கு கவுரவம் கிடைத்துள்ளது. மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு குடியரசிலுள்ள துபாய் நகரில், கடைகளில் பிளாஸ்டிக் பைகள் அதிகம் பயன்படுத்தப்படுவதைப் பார்த்த, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பத்து வயது சிறுவன் பைஸ் முகமது, இதற்குத் தீர்வு காண விரும்பினான். இதையடுத்து, இரமதான் பண்டிகைக்கு, தனக்கு கிடைத்த சிறு அன்பளிப்பு தொகையைப் பயன்படுத்தி, மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் வகையிலான பைகளை வாங்கினான். அவற்றை, அங்குள்ள சில கடைகளில் கொடுத்து, அந்த பைகளை பயன்படுத்தும்படி கூறினான். அதற்காக எந்த ஒரு தொகையையும் அவன் பெறவில்லை. பைஸ் முகமதின் இந்த முயற்சிக்கு, அப்பகுதி வர்த்தகர்கள் மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அவனது செயலைப் பலரும் பாராட்டினர். இதையறிந்த துபாய் நகராட்சியைச் சேர்ந்த, பசுமை திட்ட அதிகாரி, சிறுவன் பைஸ் முகமதுவை பசுமை குறித்த விழிப்புணர்ச்சி துாதராக அறிவித்து, அவனைப் பெருமைப்படுத்தியுள்ளார். பைஸ் முகமதுவை மேலும் ஊக்குவித்தால், எதிர்காலத்தில், துபாயில் நல்ல மாற்றம் உருவாகும் என, அந்த அதிகாரி கருத்து தெரிவித்தார். தனக்கு கிடைத்த அங்கீகாரத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ள பைஸ் முகமது, தொடர்ந்து, இந்த விழிப்புணர்வு பணியை மேற்கொள்ள உள்ளதாகவும், மேலும் பலரை இதில் ஈடுபடுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளான்.

ஆதாரம் : தினமலர்/வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.