2018-07-04 15:58:00

புலம்பெயர்ந்தோர் சார்பில் போராடும் தென்கொரிய ஆயர்


ஜூலை,04,2018. புலம்பெயர்ந்தோரை வரவேற்க மறுப்பது மனித மனசாட்சிக்கு எதிரான செயல் என்றும், குறிப்பாக, இது கிறிஸ்தவர்களின் மனசாட்சிக்கு எதிரான குற்றம் என்றும் தென் கொரிய ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

ஏமன் நாட்டிலிருந்து தென் கொரிய நாட்டிற்குள் நுழைய விரும்பிய 500க்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரை, அந்நாட்டு அரசு, ஜேஜூ தீவில் தடுத்து வைத்திருப்பதைக் குறித்து, தன் கருத்துக்களை, மேய்ப்புப்பணி மடல் வழியே வெளியிட்ட, ஜேஜூ ஆயர் பீட்டர் காங் வூ-இல் அவர்கள் இவ்வாறு கூறினார்.

ஜப்பானிய காலனிய அடக்குமுறைக்குப் பயந்து, கொரிய நாடுகளைவிட்டு வெளியேறிய மக்களை நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்று, ஆயர் காங் வூ-இல் அவர்கள் தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது உலகெங்கும் புலம்பெயர்ந்துள்ள 70 இலட்சத்திற்கும் அதிகமான கொரிய மக்களுக்கு கொடுமைகள் நிகழ்வதைக் கேள்விப்பட்டால் தங்களுக்கு எவ்வளவு தூரம் பாதிப்புக்கள் உருவாகும் என்பதை, இந்நாட்டு மக்களும், அரசும், சிந்திக்க வேண்டும் என்று, ஆயர் காங் வூ-இல் அவர்கள் தன் மடலில் எடுத்துரைத்துள்ளார்.

ஏமன் நாட்டிலிருந்து தென் கொரியாவுக்குச் செல்லும் மக்களுக்கு இதுவரை கடவு சீட்டு தேவையில்லாத நிலையில், தற்போது, ஜூன் 1ம் தேதி முதல், அந்நாட்டு மக்களுக்கு கடவுச் சீட்டு தேவை என்பதை அரசு அறிவித்துள்ளது என்று ஆசிய செய்தி கூறுகிறது.

தற்போது, தென் கொரியா நாட்டில் புகலிடம் கோரும் மக்களின் எண்ணிக்கை 35,000த்திற்கும் அதிகம் என்று ஆசிய செய்தி மேலும் கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் செய்திகள்








All the contents on this site are copyrighted ©.