2018-07-02 15:54:00

வாரம் ஓர் அலசல் – தோல்விகளை விரட்டி வெற்றியை எட்டுவதற்கு...


ஜூலை,02,2018. உலகில் யாருடைய வாழ்வுமே ஒரே சீராகச் செல்வதில்லை. அவ்வாழ்வில், ஒரு நடைபாதை போல, மேடு பள்ளங்கள், வளைவு நெளிவுகள், வெற்றி தோல்விகள் வரவே செய்யும். ஆயினும் வாழ்வு முழுவதும் வெற்றியோ, முழுவதும் தோல்வியோ நேர்வதில்லை. இரண்டுமே கலந்து கலந்துதான் வருகின்றன. இரஷ்யாவில் 2018ம் ஆண்டின் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் போர்த்துக்கல், அர்ஜென்டினா, ஜெர்மனி, இஸ்பெயின் போன்ற அணிகள் வெளியேறியதைப் பார்க்கையில், விளையாட்டுகளில், வெற்றிபெற்ற அணிகளே தொடர்ந்து வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வதில்லை. அதேநேரம், தோல்வியைத் தழுவிய அணிகளும், தோல்வியிலே வீழ்ந்து கிடப்பதில்லை என உணர்கிறோம். இந்த ஏற்ற இறக்கங்களை, தனிநபர், சமூகங்கள் மற்றும் நாடுகளின் வாழ்விலும் காண்கிறோம். 1953ம் ஆண்டு கொரியச் சண்டைக்குப் பின்னர் பிரிந்து, பகைவர்களாக இருந்த இரு கொரிய நாடுகளும் அண்மையில் கைகுலுக்கிக் கொண்டன. இருபது ஆண்டுகளுக்கு மேலாக எதிரிகளாக, அருகருகே வாழ்ந்துவரும் எத்தியோப்பியாவுக்கும், எரிட்ரியாவுக்கும் இடையே தற்போது அமைதி கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர், இந்த நாடுகளின் அமைதி உரையாடலுக்கு நல்வாழ்த்து தெரிவித்தார்.

எத்தியோப்பியாவும், எரிட்ரியாவும் எடுத்துள்ள இந்த முயற்சி, வரலாற்று சிறப்புமிக்கது என்றும், நல்ல செய்தி என்றும் அழைக்கலாம். இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், இவ்விரு நாடுகளும், அண்மையில் அமைதி கலந்துரையாடல்களைத் தொடங்கியுள்ளன. இந்த நிகழ்வு, ஆப்ரிக்காவின் கொம்பிலுள்ள இவ்விரு நாடுகளுக்கும், ஆப்ரிக்க கண்டம் முழுவதற்கும் நம்பிக்கையின் ஒளியைக் கொண்டுவரட்டும்

எத்தியோப்பியா மற்றும் எரிட்ரியா நாடுகளில் அமைதி நிலவுவதற்கு தனது ஆவலையும் செபத்தையும் தெரிவித்த திருத்தந்தை, மத்திய கிழக்கில் அமைதி நிலவ எல்லாரும் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார். சிரியாவில் இடம்பெறும் கடும் தாக்குதல்கள் பற்றியும் திருத்தந்தை மனவேதனையுடன் குறிப்பிட்டு, அந்நாட்டிலும் அமைதி நிலவச் செபிக்குமாறு விண்ணப்பித்தார்.

எத்தியோப்பியாவுக்கும், எரிட்ரியாவுக்கும் இடையே நடைபெற்றுவரும் அமைதி கலந்துரையாடல்கள், சில வாரங்களுக்கு முன்னர், பலருக்கு நினைத்துக்கூட பார்க்க இயலாத ஒன்று. இவ்விரு நாடுகளுக்கும் இடையே இரண்டாயிரமாம் ஆண்டில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தை, முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக எத்தியோப்பியா அறிவித்ததையடுத்து, எத்தியோப்பிய தலைநகர் Addis Ababaவில், இந்த கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருகின்றது. இரண்டாம் உலகப் போருக்குப்பின், எரிட்ரியா, எத்தியோப்பியாவின் ஒரு பகுதியாக இருந்தது. 1991ம் ஆண்டுவரை, எரிட்ரிய மக்கள் விடுதலைப் புரட்சி படை, முப்பது ஆண்டுகள் எத்தியோப்பியப் படையுடன் சண்டையிட்டது. இறுதியில், 1993ம் ஆண்டில் எரிட்ரியா தனி நாடாகப் பிரிந்தது. இவ்விரு நாடுகளும், உலகின் மிக ஏழை நாடுகளில் ஒன்றாகும். இந்நாடுகளுக்கு இடையே, சிறிய எல்லைப் பிரச்சனை தொடர்பாக, 1998ம் ஆண்டு முதல் இரண்டாயிரமாம் ஆண்டுவரை கடும் சண்டை இடம்பெற்றது. அந்தப் போருக்கென இலட்சக்கணக்கான டாலர்களைச் செலவிட்டன. இலட்சக்கணக்கான ஆட்சேதமும், பொருள்சேதமும் அந்நாடுகளுக்கு ஏற்பட்டன. ஆயினும் இந்தப் பகைமையைத் தொடராமல், தற்போது நல்ல செயல் இடம்பெற்று வருகிறது.

தோல்விகள் மட்டுமே துரத்திய வாழ்க்கைப் பாதையில், வெற்றிகளை வேகத்தடையாகக்கூட வரவிடாமல்  தோல்விகளைத் துரத்தி வெற்றிக் கோப்பையை கையிலேந்தி மகிழ்பவர்களைப் பார்க்கிறோம். தோல்விகள் என்பவை, நிரந்தரமல்ல. இயற்கையின் இந்த நியதியைப் புரிந்துகொண்டு, தன்னம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்பவர்கள், தோல்விகளைச் சமாளித்து, வெற்றிகளாகவும் மாற்றுகின்றனர். தோல்வி ஏற்பட அடிப்படையான காரணங்களாக...

நாம் எடுத்துக்கொண்ட செயலில் போதிய அறிவு அல்லது அனுபவம் இல்லாமை, ஒரே நாளில் ஒரே முறையில் செய்து முடித்துவிட வேண்டும், ஏராளமாக சேர்த்துவிட வேண்டும் என்ற பேராசை, பதட்டம், கால இடைவெளிவிட்டுச் செய்ய வேண்டிய பல செயல்களை, அவசர அவசரமாகச் செய்வதால் ஏற்படும் விளைவு, போதிய முதலீடு இல்லாமல் அகலக் கால் வைப்பது, பின்னர் பாதியில் செயல்கள் நின்று போவதால் ஏற்படும் சிக்கல்கள், நமது பழக்க வழக்கங்களும், சமூகத்தில் நாம் நடந்து கொள்கின்ற விதமும் இதமாக இல்லாமை, எதற்கெடுத்தாலும் கோபப்படுவது, எடுத்தெறிந்து பேசுவது, உண்மையாக நடந்துகொள்ளாமை போன்ற சில தனிமனிதக் குறைபாடுகள், நாம் எடுத்துக்கொண்ட செயலில் இலாபத்தை மட்டுமே பெரிதாக எதிர்பார்த்து, அதற்குத் தகுந்தாற்போல் உண்மையாக உழைக்காமை, வெற்று வார்த்தைகளால் வீரம்பேசி நம்மைச் சுற்றி உள்ளவர்களின் எதிர்ப்புக்களை வளர்த்துக் கொண்டது, நம்முடைய திறமையும், நாம் எடுத்துக் கொண்ட செயலும் இணைந்து போகாமை போன்றவை என்று சொல்லப்படுகின்றன. தோல்வி எதுவாக இருந்தாலும் முதலில் நம்மை முன்னிறுத்தி, இதற்கு நாம் எந்தெந்த வகையில் காரணமாய் இருக்கிறாம் என்று கண்டறிய வேண்டும். மிகவும் நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் பெரும்பான்மையான தோல்விகளுக்கு அவரவர்களே அடிப்படைக் காரணமாக இருப்பது நன்கு தெரியவரும். தோல்வி வந்ததும் உடனே தொழிலை மாற்றாமல், நின்று நிதானித்து அடுத்த முறை எச்சரிக்கையாக நம் சக்திக்கு ஏற்ற அளவில் தெளிவான நோக்கோடு செயல்பட வேண்டும். இழப்பு, ஏமாற்றம், தோல்வி போன்றவை, பலருக்கு வீரத்தையும் வேகத்தையும் தரும் நிகழ்ச்சியாக அமைந்து விடுகிறது.

2018ம் ஆண்டின் இந்திய அழகி (மிஸ் இந்தியா) போட்டி இறுதிச்சுற்றில் வெற்றி பெற்று மிஸ் இந்தியா என்ற பட்டத்தை வென்றிருப்பவர், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அனுக்ரீத்தி வாஸ். இவர், சென்னை இலயோலா கல்லூரியில் பி.ஏ பிரெஞ்சு இரண்டாமாண்டு பயிலும் மாணவி. இவரிடம் இறுதிச்சுற்று போட்டியில்,`வாழ்க்கையின் சிறந்த ஆசிரியர் யார்... வெற்றியா, தோல்வியா?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, சற்றும் தயக்கமின்றி, இவ்வாறு தெளிவாகப் பதில் சொல்லியுள்ளார் அனுக்ரீத்தி வாஸ்.

தோல்விதான் சிறந்த ஆசிரியர். தோல்வியைச் சந்தித்தால்தான், மனம் அதைச் சவாலாக எடுத்துக்கொள்ளும், கடின உழைப்புக்கு நம்மை உந்தித்தள்ளும் மற்றும் நாம் அடைய வேண்டிய இலக்கை அடைய வைக்கும். கிராமத்துப் பின்னணியிலிருந்து வந்த என்னை, தொடர்ச்சியான தோல்விகளும் விமர்சனங்களுமே செதுக்கியிருக்கின்றன. ஒருகட்டத்தில் என்னைத் தோல்விகளிலிருந்து மீட்க என் அம்மாவைத் தவிர எவரும் முன்வரவில்லை. அனுபவமே சிறந்த ஆசிரியர். தோல்விகள் நம்மைத் துரத்தினாலும், வெற்றி ஒருநாள் நம்மை நிச்சயம் தேடிவரும்”  என்று பதில் சொல்லிய அனுக்ரீத்தி வாஸ், இந்திய அழகிப் பட்டத்தைத் தட்டிச்சென்றார். 2018ம் ஆண்டின் தமிழ்நாடு அழகி பட்டத்தையும் இவர் பெற்றிருக்கிறார். இத்தனை உருக்கமாக அவர் பேசியதன் காரணம், தனியாளாக அவரை வளர்த்தெடுத்த அவரின் தாய். பிரெஞ்சு மொழி பயில வேண்டுமென்பது என் அம்மாவின் ஆசை. அதனால் அதைப் படிக்கிறேன் என்கிறார் அனுக்ரீத்தி வாஸ். தன் மகள் வெற்றிபெற்றது பற்றி கூறும் அவரின் தாய் செலினா அவர்கள், “என் மகளுக்கு நான்கு வயது இருக்கும்போது, அவள் அப்பா எங்களை விட்டுப் பிரிந்துட்டார். அனுவையும், அவள் தம்பியையும், அப்பாவும் அம்மாவுமாக இருந்து, கடும் கஷ்டங்களுக்கு இடையே வளர்த்தேன். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குப் போனேன். குழந்தைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற கவலை ஒருபுறம் இருக்க, என்ன செய்தாலும் குற்றம் சொல்ல வேண்டுமே என்று இருக்கும் கூட்டத்தை எதிர்கொள்கிற துணிச்சலும் தேவைப்பட்டது. எனக்கு அப்போத அது இல்லை. என் மகள்தான் எனக்கு வழிகாட்டியாக இருந்தாள். துணிச்சல்தான் அவளுடைய அழகு... தோல்விகளே வாழ்க்கை இல்லை என்பதற்கு அனுக்ரீத்தி வாஸ் அவர்களின் அம்மா ஒரு சான்று. எறும்புக்கு அப்படி என்ன பெரிய எதிர்காலம் இருக்கப் போகின்றது?  ஆனாலும், அது, ஒரு வழி தடைபட்டால் அடுத்த வழியை அமைத்து கொள்கிறது. வாழ ஒரு வழிமட்டும்தான் இருக்கிறதா, எத்தனையோ வழிகள் உள்ளன. எனவே முயற்சிப்போம், வாழ்வோம். பிறர் வாழ வழிகாட்டுவோம்.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.