2018-07-02 16:12:00

உலகில் அமைதி நிலவ செபிக்குமாறு அழைப்பு


ஜூலை,02,2018. வன்முறை மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள நிகராகுவா, சிரியா ஆகிய நாடுகள் குறித்தும், அமைதி பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்கும் எத்தியோப்பியா மற்றும் எரிட்ரியா குறித்தும் தன் மூவேளை செப உரையின் இறுதியில் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நிகரகுவா நாட்டு மக்களுக்காக தான் செபிக்கும் அதேவேளை, அந்நாட்டில் அமைதிக்காக உழைத்துவரும் அந்நாட்டு ஆயர்கள் மற்றும் நல்மனம் கொண்ட அனைத்து மக்களுக்கும் தன் பாராட்டுக்களை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சிரியா நாட்டில், குறிப்பாக, அந்நாட்டின் Daraa மாநிலத்தில் இடம்பெற்ற அண்மை இராணுவ தாக்குதல்களால், பல கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், பல ஆயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தவர்களாக மாறியுள்ளது குறித்தும் தன் கவலையை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், கடந்த ஒருவாரமாக, தாய்லாந்தின் அடி நில குகைகளில் காணாமல் போயுள்ள இளையோர் குறித்தும் தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை, அவர்களுக்காக தான் தொடர்ந்து செபித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஏறத்தாழ 20 ஆண்டு இடைவெளிக்குப்பின் தற்போது, எரிட்ரியா மற்றும் எத்தியோப்பியா நாடுகள் தங்களிடையே அமைதிப் பேச்சுவார்த்தைகளை துவக்க முன் வந்திருப்பது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தி என்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் சனிக்கிழமையன்று, மத்தியக் கிழக்கு நாடுகளின் அமைதிக்காக தான் ஏனைய கிறிஸ்தவ சபைத் தலைவர்களுடன் பாரி நகரில் ஒன்று கூடி செபிக்க உள்ள வேளையில், அனைவரின் செபத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.