2018-06-29 15:38:00

கர்தினால் பரோலின், மொந்தெநெக்ரோ பிரதமர் சந்திப்பு


ஜூன்,29,2018. மொந்தெநெக்ரோ மற்றும் செர்பியக் குடியரசுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், மொந்தெநெக்ரோ குடியரசின் பிரதமரைச் சந்தித்த பின்னர், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மொந்தெநெக்ரோ குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவிவரும் நட்புறவும், ஒத்துழைப்பும் தொடர்ந்து இடம்பெறும் மற்றும், மொந்தெநெக்ரோவில் திருப்பீட தூதரகத்தின் நிலையான அலுவலகம் திறக்கப்படுவதற்கு உடன்பாடு உருவாகும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார், கர்தினால் பரோலின்.

இதன் வழியாக, மொந்தெநெக்ரோவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையேயுள்ள உறவுகளுக்கு புதிய உந்துதல் கிடைக்கும் எனவும், நல்லிணக்கம், ஒன்றிப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு ஆதரவாக, இரு தரப்பும் செயல்பட உதவும் என்றும் கர்தினாலின் அறிக்கை கூறுகிறது.

ஜூன் 27, இப்புதனன்று மொந்தெநெக்ரோ மற்றும் செர்பியக் குடியரசுகளுக்கு சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ள, கர்தினால் பரோலின் அவர்கள், ஜூலை 02, வருகிற திங்களன்று அதனை நிறைவுசெய்வார்.

தென்கிழக்கு ஐரோப்பாவிலுள்ள பால்கன் நாடுகளில் ஒன்றான மொந்தெநெக்ரோ, முன்னாள் யுக்கோஸ்லாவியாவிலிருந்து 2006ம் ஆண்டில் பிரிந்து, தனிக் குடியரசானது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.