2018-06-28 15:10:00

இமயமாகும் இளமை : எடை குறைந்த செயற்கைக்கோள் சாதனை


சென்னை, கேளம்பாக்கம் இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் பயிலும் நான்கு மாணவர்கள் உலகிலேயே மிகவும் எடை குறைந்த, அதாவது 33.39 கிராம் எடையுள்ள செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கைக்கோளை, அமெரிக்க ஐக்கிய நாட்டின் நாசா விண்வெளி ஆய்வு மையம், வருகிற ஆகஸ்டில், Colorado விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவவுள்ளது. மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சித் திறனை வளர்த்திடும் வகையில், நாசா ஆய்வு மையமும், idoodle-learning அமைப்பும் இணைந்து, 17 வயதுக்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு “Cubes in Space” எனும் போட்டித் தேர்வை நடத்தி வருகின்றது. இந்தப் போட்டித் தேர்வில் இவ்வாண்டில் இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்தில், விண்வெளி பொறியியல் கல்வி பயிலும் K.J. ஹரிகிருஷ்ணன், G.சுதி, P.அமர்நாத், T.கிரிபிரசாத் ஆகிய நான்கு மாணவர்கள் தயாரித்த புதிய செயற்கைக்கோள் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. ஜெய்ஹிந்த்-1S எனப்படும் இந்த பரிசோதனை செயற்கைக்கோளை, 15 ஆயிரம் ரூபாய் செலவில், இந்த மாணவர்கள் தயாரித்துள்ளனர். மூன்று வாரங்களுக்குள் இதற்குரிய சாமான்களைச் சேகரித்து, இரு வாரங்களுக்குள் இதை அமைத்துள்ளனர். இந்த நான்கு மாணவர்களின் தலைவராகச் செயல்பட்ட மாணவர் ஹரிகிருஷ்ணன் இவ்வாறு விளக்கியுள்ளார். இந்த செயற்கைக்கோள், 'சர்-ஆர்பிட்டல்' முறையில், சோதனை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகளவில், மாறிவரும் பருவநிலை மாற்றங்களைக் கண்டறிவது மிகவும் சவாலாக உள்ளவேளை, இச்செயற்கைக்கோள் மூலம் அதை எளிதில் கண்டறியலாம். அதேபோல் “Cubes in Space” போட்டியில் தேர்வு செய்யப்படும் கண்டுபிடிப்புகள் பலுானில் அனுப்பப்படுகிறன. அவ்வாறு, பலுானில் செல்லும்போது, வானிலுள்ள காற்றின் அடர்த்தி, மேகங்களில் உள்ள நீர் மூலக்கூறுகளின் அளவுகள் உட்பட, 20 விதமான பாராமீட்டர்களை எளிதில் கண்டறியலாம். அதனால், அதிக மழைப்பொழிவு உள்ள இடங்களையும் கண்டறியலாம். கடந்த, 2017ம் ஆண்டு, கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்த, ரிபாத் சாருக் ராஜ் என்ற மாணவர், 64 கிராம் எடையுள்ள, சிறிய கையடக்க செயற்கைக்கோளைத் தயாரித்து உலக சாதனை படைத்தார். இச்சாதனையை தற்போது இந்த நான்கு மாணவர்கள் முறியடித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.