2018-06-27 15:15:00

சிறப்பு வழிபாட்டு நிகழ்வில் 14 புதிய கர்தினால்கள்


ஜூன் 27,2018. ஜூன் 28, இவ்வியாழன் மாலை 4 மணியளவில், புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டு நிகழ்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிதாக நியமனம் பெற்றுள்ள 14 கர்தினால்களுக்குரிய தொப்பியும், மோதிரமும் அணிவித்து, அவர்களை கர்தினால்களாக உயர்த்துகிறார்.

இவ்வாண்டு மே 20ம் தேதி, தூய ஆவியார் பெருவிழா ஞாயிறன்று திருத்தந்தை அவர்கள் அறிவித்த 14 புதிய கர்தினால்களுக்கு, வியாழன் மாலை பொறுப்புகள் வழங்கப்பட்ட பின், ஜூன் 29, வெள்ளி, புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவன்று காலை 9.30 மணிக்கு, புதிய கர்தினால்களுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றுவார்.

புதிதாக பொறுப்பேற்கும் 14 கர்தினால்களில், மூவர் திருப்பீடத்தின் மூன்று துறைகளிலும், ஒருவர் திருத்தந்தையின் பிரதிநிதியாக உரோம் மறைமாவட்ட ஆயராகவும், ஒருவர் பாத்திமா திருத்தலத்தை உள்ளடக்கிய லெயிரியா-பாத்திமா மறைமாவட்ட ஆயராகவும் பணியாற்றுகின்றனர்.

மேலும் இவர்களில் ஈராக் நாட்டின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ, பாகிஸ்தானின் காரச்சி பேராயர் ஜோசப் கூட்ஸ், ஜப்பானின் ஒசாகா பேராயர் தாமஸ் அக்குய்னாஸ் மான்யோ ஆகிய மூவர் ஆசியர்கள்.

திருப்பீட விசுவாசக்கோட்பாட்டு பேராயத் தலைவர் பேராயர் லூயிஸ் லதாரியா, உரோம் மறைமாவட்ட பிரதிநிதி பேராயர் ஆஞ்சலோ தெ தொனாதிஸ், திருப்பீட செயலகத்தின் பிரதிநிதியும், மால்ட்டா இராணுவ பக்த அமைப்பின் சிறப்பு பிரதிநிதியுமான ஜொவான்னி ஆஞ்சலோ பெச்சு, திருத்தந்தையின் பிறரன்புப் பணி அலுவலகத்தின் தலைவரான பேராயர் கோன்ராட் கிராஜேவிஸ்கி, போர்த்துக்கல் நாட்டு பாத்திமா பேராயர் அந்தோனியோ தோஸ் சாந்தோஸ் மார்தோ, பெரு நாட்டின் ஹுவாங்காயோ பேராயர் பேத்ரோ பரெட்டோ,  மடகாஸ்கரின் தோவாமாசினா பேராயர் தெசிரே சரஹசானா,  அக்குய்லா பேராயர் ஜூசெப்பே பெத்ரோக்கி, மெக்சிகோ நாட்டின் ஹலாப்பா முன்னாள் பேராயர் செர்ஜோ ரிவேரா, பொலிவியா நாட்டின் கொரோகோரோ முன்னாள் ஆயர் தொரிபியோ போர்க்கோ மற்றும் கிளேரிசியன் சபையின் அருள்பணியாளர் அக்விலினோ மெரீனோ  ஆகியோர் ஏனைய 11 புதிய கர்தினால்கள் ஆவர்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.