2018-06-26 14:39:00

இமயமாகும் இளமை – இந்தியரின் தங்கக் கனவை நனவாக்கிய தமிழர்


2016ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்ற வேளையில், இந்திய விளையாட்டு வீரர்கள், ஒரு தங்கப்பதக்கமாவது பெறவேண்டுமென்று நூறு கோடிக்கும் மேலான இந்தியர்கள் கனவு கண்டனர். அந்தக் கனவை, மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டில் நிறைவேற்றினார், மாரியப்பன் தங்கவேலு என்ற இளையவர்.

மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டில் தங்கப்பதக்கத்தையும், பின்னர், இந்தியக் குடியரசின் பத்மஸ்ரீ விருதையும், அர்ஜுனா விருதையும் வென்ற இளையவர் மாரியப்பன், 5 வயது சிறுவனாக இருந்தபோது, பள்ளிக்குச் சென்ற வழியில், ஒரு பேருந்து அவரது வலது கால் மீது ஏறியதால், அவர் கால் ஊனமுற்றார். அந்தப் பேருந்தை ஓட்டியவர், குடிபோதையில் இருந்தார்.

குடிபோதையில் பேருந்தை ஓட்டியவர், ஒரு மரத்தின்மீது மோதி, அவருக்கு மட்டும் அடிபட்டிருந்தால், அவர் செய்த தவறுக்குத் தகுந்த விளைவைச் சந்தித்தார் என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்ளலாம். ஆனால், சாலையின் ஓரமாக, பள்ளிக்குச் சென்ற சிறுவன் மாரியப்பனுக்கு ஏன் இவ்விதம் நிகழவேண்டும் என்ற கேள்வி, பல ஆண்டுகள் அச்சிறுவனையும், அவரது குடும்பத்தையும் வேதனையில் ஆழ்த்தியிருக்கும்.

விடை கிடைக்காத அந்த வேதனைக் கேள்விக்கு, ரியோவில் விடை கிடைத்ததைப் போல் நாம் எண்ணிப் பார்க்கலாம். அவர் ஒலிம்பிக் விளையாட்டில் தங்கப்பதக்கம் பெற்றபோது, "ஒருவேளை, மாரியப்பனுக்கு இந்த விபத்து நிகழ்ந்திராவிடில், அவரும் ஒரு சராசரி இளைஞனாக வளர்ந்திருப்பார். ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் அளவு, அவர் தன் திறமைகளையும், மன உறுதியையும் வளர்க்காமல் போயிருக்கலாம்" என்ற கோணத்தில் நம் சிந்தனைகள் செல்வதை உணர்கிறோம். பதிலேதும் கிடைக்காமல் பல ஆண்டுகள் மாரியப்பனும், அவரது குடும்பத்தினரும் அடைந்த துன்பத்திற்கு, ரியோ தங்கப்பதக்கம் ஒரு விளக்கமாக அமைந்தது.

1995ம் ஆண்டு, ஜூன் 28ம் தேதி பிறந்த மாரியப்பன் அவர்கள், இவ்வியாழனன்று தன் 23வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரை இறைவன் அனைத்து நலன்களாலும் நிறைத்திட வாழ்த்துவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.