2018-06-25 15:25:00

கத்தோலிக்க கல்வி, உலகிற்கு உயிரூட்டம் அளிக்கிறது


ஜூன்,25,2018. Gravissimum Educationis என்ற கல்வி குழுவின் ஏறக்குறைய எண்பது பிரதிநிதிகளை, இத்திங்களன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்க கல்வி, தாராளமயமாக்கப்பட்ட உலகிற்கு உயிர்நிலையாக இருந்து, கிறிஸ்தவ மீட்பின் வாக்குறுதியைப் பிரதிபலிக்கின்றது என்று கூறினார்.

கத்தோலிக்க கல்வி நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பை உருவாக்குவதற்கு Gravissimum Educationis குழு எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டி ஊக்குவித்த திருத்தந்தை, அந்தக் குழுவிற்கு மூன்று பரிந்துரைகளையும் குறிப்பிட்டார்.

குழுக்களாக இணைந்து பணியாற்றுவதை அதிகரித்தல், சமூக மாற்றங்களை நம்பிக்கையோடு நோக்குதல், தனித்துவம், தரம் மற்றும், பொதுநலனில் கவனம் செலுத்துதல் ஆகிய தலைப்புகளில் விளக்கினார் திருத்தந்தை.

‘உருமாற்றுவதற்கு கல்வி’ என்ற தலைப்பில் நடத்தும் கருத்தரங்கில் கலந்துகொண்ட இப்பிரதிநிதிகளிடம் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, கத்தோலிக்க கல்வியாளர்கள் நம்பிக்கையை இழந்துவிடாமல், இன்றைய உலகுக்கு தங்களின் பங்கை ஆற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

பள்ளிகளும், பல்கலைக்கழகங்களும், தங்களின் பணிகளுக்கும், திருஅவையின் நற்செய்திபணிக்கும் இடையே தொடர்ச்சியை காட்ட வேண்டுமென்றும், இந்தக் குழு, தனது பணியில் நிறைவுகாண்பதற்கு, அதன் கிறிஸ்தவ தனித்துவத்திற்கு ஒத்திணங்கும் வகையில் அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

திருப்பீட கத்தோலிக்க கல்வி பேராயத்தின் வேண்டுகோளின்பேரில், 2015ம் ஆண்டில் Gravissimum Educationis அமைப்பு உருவாக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.