2018-06-23 15:54:00

ஆப்ரிக்க சமூகங்களில் அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த அழைப்பு


ஜூன்,23,2018. எருசலேமிலிருந்து எரிக்கோ சென்ற மனிதர் ஒருவர், வழியில் கள்வர் கையில் அகப்பட்டு, அடிக்கப்பட்டு, பாதி குற்றுயிராய்க் கிடந்த நிலையோடு (லூக்.10:30-37), இன்றைய ஆப்ரிக்காவை ஒப்பிடலாம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறினார்.

OAIC எனப்படும் ஆப்ரிக்க கிறிஸ்தவ சபைகள் அமைப்பின் (Organization of African Instituted Churches) 11 பிரதிநிதிகளை, முதன்முறையாக வத்திக்கானில் இச்சனிக்கிழமையன்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்களின் வருகைக்கும், கத்தோலிக்கத் திருஅவையோடு நெருங்கிய தொடர்புகொண்டிருப்பதற்கு, அந்த அமைப்பு ஆவலாக இருப்பதற்கும் நன்றி தெரிவித்தார்.

பல்வேறு தன்மை கொண்ட ஆப்ரிக்க மக்களின் மாண்பைப் பாதுகாத்து, ஆப்ரிக்க சமூகங்களை, நீதியும் அமைதியும் நிறைந்ததாக உருவாக்குவதற்கு, இந்த அமைப்பு எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டிய திருத்தந்தை, ஆப்ரிக்க நாடுகளில் பல, அமைதிக்கும், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முன்னேற்றத்திற்கும் வெகுதொலைவில் உள்ளது வருத்தம் தருகின்றது என்று கூறினார்.

ஆப்ரிக்கக் கண்டத்தின் மனித, கலாச்சார மற்றும் பொருளாதார வளங்களில் மிகுந்த கவனம் செலுத்தினால், அக்கண்டத்தின் பிரச்சனைகளுக்கு எளிதாகத் தீர்வு காண முடியும் என்பதை நாம் உண்மையிலேயே நம்பினால், இந்த வளங்களை விவேகமுடனும், அறநெறிப்படியும் கையாள்வதற்கு எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் ஆதரவு தர வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை என்பதையும் நினைவுபடுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ். ஆப்ரிக்க மக்கள், ஆழ்ந்த சமயப்பற்றும், படைத்தவராம் கடவுளோடும், ஆன்மீக உலகோடும் நல்லிணக்க உணர்வும் கொண்டவர்கள் என்றும், இம்மக்கள், குடும்பத்தின் முக்கியத்துவத்தை மதிப்பவர்கள், வாழ்வை அன்புகூர்பவர்கள், குழந்தைகளை, கடவுளின் கொடையாகக் கருதுபவர்கள், வயதானவர்களை மதிப்பவர்கள், பிறருக்குச் சேவையாற்றும் பண்புள்ளவர்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.

ஆப்ரிக்க மக்களின் சமயக் கொள்கைகளையும், வாழ்வுக் கோட்பாடுகளையும் கிறிஸ்தவர்களும் கொண்டிருக்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, பல்வேறு இன, கலாச்சார மற்றும் மொழிகளைக் கொண்ட ஆப்ரிக்க சமூகங்களில் நல்லிணக்க வாழ்வை ஊக்குவிக்க வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமை எனவும் கூறினார்.

1978ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஆப்ரிக்க கிறிஸ்தவ சபைகள் அமைப்பு, WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றத்தில் உறுப்பினராக உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.