2018-06-22 16:28:00

திருத்தந்தை - விமானப்பயணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி


ஜூன்,22,2018. கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சியில், மதம் மாற்றுதல் என்ற சொல், அகராதியிலிருந்து அகற்றப்பட வேண்டும், கிறிஸ்தவ ஒன்றிப்பு உணர்வு, மதம் மாற்றுதல்  ஆகிய இரண்டும் ஒன்றாகச் செல்ல முடியாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பன்னாட்டு செய்தியாளர்களிடம் கூறினார்.  

ஜூன் 21, இவ்வியாழனன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவுக்கு ஒரு நாள் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருத்தூதுப்பயணத்தை மேற்கொண்டு திரும்பிய விமானப் பயணத்தில், தன்னோடு பயணம் மேற்கொண்ட ஏறத்தாழ அறுபது செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இளையோர், புலம்பெயர்வு, கலப்புத் திருமணங்கள், நீதியான போர், கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல் ஆகிய தலைப்புகளில், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நீதியான போர் கொள்கையைப் புறக்கணிக்கும் பிற கிறிஸ்தவ சபைகளுடன் கத்தோலிக்கத் திருஅவையும் சேர வேண்டுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, போர்கள், காயின் போன்று தீர்வு காணப்படக் கூடாது, மாறாக, கலந்துரையாடல், பேச்சுவார்த்தை, இடைநிலை ஆகியவற்றின் வழியாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.

பிற கிறிஸ்தவ சபையைச் சார்ந்த ஒருவர், கத்தோலிக்கரைத் திருமணம் செய்துகொள்ளும்போது, அக்கிறிஸ்தவர் திருநற்கருணை வாங்குவதற்கு அனுமதிப்பது குறித்த அண்மை ஜெர்மன் ஆயர்களின் முயற்சி பற்றிக் கேட்கப்பட்டபோது, இதற்கு நல்ல தீர்வு காண்பதற்கு இவ்விவகாரம் குறித்து இன்னும் ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது என்று கூறினார், திருத்தந்தை.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.