2018-06-22 16:45:00

செப்டம்பர் 22,23, லித்துவேனியாவில் திருத்தூதுப்பயணம்


ஜூன்,22,2018. பிறரை அன்புகூர்வது, நம் வாழ்வின் தொடர்ச்சியான செயலாக மாற வேண்டியது அவசியம் என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில் இவ்வெள்ளியன்று, வெளியாயின.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் லித்துவேனியா நாட்டிற்கு திருத்தூதுப்பயணம் மேற்கொள்வார் என்றும், இந்த இரு நாள்கள் பயணத்தில், Vilnius, Kaunas ஆகிய இரு நகரங்களுக்குச் செல்வார் என்றும் திருப்பீடம் அறிவித்துள்ளது.

பால்டிக் நாடாகிய லித்துவேனியாவில், முன்னாள் சோவியத் யூனியன் அரசு, ஐம்பது ஆண்டுகளாக திட்டமிட்டு குற்றங்கள் நடத்திய இடமான Vilnius நகரின் KGB தலைமையிடத்தில் திருத்தந்தை செபிப்பார்.

இந்த கட்டடத்தின் அடித்தளத்தில்தான், பேராயர் Teofilius Matulionis அவர்கள் சிறைவைக்கப்பட்டிருந்தார். மறைசாட்சியான இப்பேராயர், கடந்த ஆண்டு ஜூன் 25ம் தேதி முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டார். முத்திப்பேறுபெற்ற Matulionis அவர்கள், சோவியத் வதை முகாம்களில் பத்து ஆண்டுகளும், பிற இடங்களில் ஆறு ஆண்டுகளும், கிறிஸ்தவ விசுவாசத்திற்காகச் சிறைத்தண்டனைகளை அனுபவித்தவர்.  

வரலாற்று ஆசிரியர்கள், இரத்த நிலங்கள் என்ற பதத்தைக் குறிப்பதற்கு லித்துவேனியாவையே பயன்படுத்துகின்றனர். பால்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள லித்துவேனியா, இருபதாம் நூற்றாண்டில் சர்வாதிகார ஆட்சிகளில் மிகவும் துன்பங்களை அனுபவித்த நாடுகளில் ஒன்றாகும். ஐம்பது ஆண்டுகள் சோவியத் ஆட்சியின்கீழ் இருந்த பின்னர், 1990ம் ஆண்டில் தனி நாடாகப் பிரிந்தது லித்துவேனியா.       

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.