2018-06-22 16:21:00

இறைவார்த்தை சபை பொதுப்பேரவை பிரதிநிதிகளுக்கு திருத்தந்தை


ஜூன்,22,2018. தங்களின் பொதுப்பேரவையில் கலந்துகொள்ளும் இறைவார்த்தை துறவு சபையின் ஏறத்தாழ 155 பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கை, அறிவித்தல், சகோதரர்கள் ஆகிய மூன்று சொற்களின் அடிப்படையில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

"’கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது (2கொரி.5,14)’ : இறைவார்த்தையில் வேரூன்றி, கிறிஸ்துவின் பணிக்கு அர்ப்பணித்தல்” என்ற இலக்கில், இறைவார்த்தை சபையினர் தங்கள் பணிகளை ஆற்றி வருகின்றனர் என்றுரைத்த திருத்தந்தை,  இறைவார்த்தை சபையின் பணிகளையும், அச்சபையைச் சார்ந்த அனைவரையும் அன்னைமரியிடம் அர்ப்பணித்து செபிப்பதாகத் தெரிவித்தார்.

முதலில், இறைவனிலும், இறைபராமரிப்பிலும் நம்பிக்கை வைக்குமாறு கூறியத் திருத்தந்தை, இறைவனின் கரங்களில் தன்னைக் கையளிப்பது, கிறிஸ்தவர்கள் மற்றும் அர்ப்பண வாழ்வு வாழும் எல்லாருக்கும் முக்கியமானது என்று கூறினார்.

எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும், இயலக்கூடிய எல்லா வழிகளிலும் இறைவார்த்தையை அறிவிப்பது இச்சபையின் தனிவரமாக உள்ளது என்றும், நீங்கள் இறைவார்த்தையில் வேரூன்றி இருந்தால், உங்கள் ஒவ்வொருவரையும் உண்மையான மறைப்பணியாளராக அது மாற்றும் என்றும் திருத்தந்தை கூறினார்.

நாம் தனியாக இல்லை, நாம் திருஅவையாக, மக்களாக இருக்கின்றோம், நமக்கு சகோதரர், சகோதரிகள் உள்ளனர், இவர்களோடு வாழ்வுப் பாதையில் நடக்கின்றோம் என்றுரைத்த திருத்தந்தை, ஒருவரையொருவர் அன்புகூர்ந்து வாழ்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.