2018-06-21 17:12:00

இமயமாகும் இளமை : பசுமையை மீட்கும் பணியாளர்


சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்த மூர்த்தி  என்பவர், கடந்த நான்கு ஆண்டுகளில், ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்துள்ளார். இறுதி மூச்சு உள்ளவரை, மரங்கள் வளர்க்க வேண்டும் என்பதே என் இலட்சியம் என்றும் சொல்லியுள்ள மூர்த்தி அவர்களுக்கு, 'பசுமை மூர்த்தி' என்ற புனைப்பெயரும் சூட்டப்பட்டுள்ளது.  'பசுமை மூர்த்தி' அவர்கள், இந்த தனது இலட்சியம் பற்றி ஓர் ஊடகத்திடம் இவ்வாறு சொல்லியிருக்கிறார்... எனது சிறுவயதில் சென்னையின், அடையாறு, திருவான்மியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகள், மரங்கள் நிறைந்து ரம்மியமாக காட்சி தரும். நான் துபாயில் சமையலராகப் பணிபுரிந்தேன். கோடை விடுமுறையில் ஊருக்கு வரும்போதெல்லாம் சிறிது சிறிதாக மரங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 2010ம் ஆண்டில், பணிக்காலம் முடிந்து சென்னை திரும்பியபோது, எங்கள் பகுதியில் பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. அதனால், அந்த ஆண்டு வெப்பம் அதிகரித்து, சாலையில் நடப்பதே, கோவிலில் தீ மிதிப்பது போல இருந்தது. அதுவே, எனக்கு மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. மரங்கள் நட வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், மரக்கன்றுகள் வாங்கக்கூட, என்னிடம் பண வசதி இல்லை. இதற்காக, ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். அதன்பின், எனது ஊதியத்தின் ஒரு பகுதியை, மரக்கன்றுகள் நடவும், அதனைப் பராமரிக்கவும் ஒதுக்கினேன். 2013ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, முதன் முதலாக மரக்கன்றுகள் நடத் துவங்கினேன். ஆரம்பத்தில், எங்கள் பகுதியில், 15 மரக்கன்றுகளை மட்டுமே நட்டேன். இதனை, சிலர் ஏளனமாக பேசி நகைத்தனர். அதுவே, இப்பணியை விரிவாக்க உதவியது. பெசன்ட் நகர், எம்.ஜி.சாலை, ஏ.வி. சாலை, சாஸ்திரி நகர், பெசன்ட் நகர் முதல் எலியட்ஸ் கடற்கரை, ராஜாஜி பவனை சுற்றியுள்ள பகுதிகள், அடையாறு முக்கிய சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரங்கள் நட்டுள்ளேன். தற்போது ஆயிரம்  மரக்கன்றுகள் வரை நட்டுள்ளேன். இதில், 900க்கும் மேற்பட்ட மரங்கள் நன்கு வளர்ந்துள்ளன. 69 மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலும், அரச மரம், வேப்ப மரம், புங்கை மரம், பாதாம் மரம், மா மரம் உள்ளிட்ட சில மரங்கள் மட்டுமே நடுவேன். வாரந்தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மரம் நடுகிறேன். மற்ற நாட்களில், அதனைப் பராமரிக்கும் பணியைச் செய்கிறேன்.

பசுமையை மீட்கும் ஆர்வலர்களுக்கு ஆதரவளிப்போம்.

ஆதாரம் : தினமலர் / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.