2018-06-19 16:38:00

காரித்தாசின் உணவைப் பகிர்வோம் நிகழ்வுக்கு திருத்தந்தை..


ஜூன்,19,2018. உலக புலம்பெயர்ந்தோர் நாளில், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோருடன் உணவைப் பகிர்ந்துகொண்டு அந்நாளைச் சிறப்பிக்குமாறு, நன்மனம் கொண்ட அனைத்து மனிதருக்கும், இச்செவ்வாயன்று அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

“பயணத்தைப் பகிர்வோம்” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, அகில உலக காரித்தாஸ் நிறுவனம், உலக புலம்பெயர்ந்தோர் நாளில், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோருடன் உணவைப் பகிர்ந்துகொள்ளவும், அம்மக்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவும் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தது.

காரித்தாஸ் நிறுவனத்தின் இத்திட்டத்திற்கு தனது முழு ஆதரவை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரிலுள்ள காரித்தாஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய உணவு வழங்கும் மையத்தில், இந்த உலக நாளில் மதிய உணவு உண்ணும் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர்க்குச் செய்தி அனுப்பியுள்ளார்.    

மனிதரிடையே நிலவும் தடுப்புச்சுவர்களை அகற்றி, உடன்பிறப்பு உணர்வை வளர்ப்பதற்கு,  உணவைப் பகிர்தல் போன்ற, சிறு சிறு எளிய நிகழ்வுகள் முக்கியம் என்று தன் செய்தியில் கோடிட்டுக்காட்டியுள்ள திருத்தந்தை, காரித்தாஸ் நிறுவனத்தின் இம்முயற்சியைப் பாராட்டி ஊக்குவித்துள்ளார்.  

ஜூன் 20, இப்புதன்கிழமையன்று சிறப்பிக்கப்படும், ஐ.நா.வின் உலக புலம்பெயர்ந்தோர் நாளில், அகில உலக காரித்தாஸ் நிறுவனத்தின் உலகளாவிய செயல்திட்ட வாரத்தின் ஒரு பகுதியாக, உரோம் காரித்தாஸ் மையத்தில், திருஅவை மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட, காரித்தாஸ் நிறுவனத்தின் தலைவர்களுடன் ஏறத்தாழ நுறு புலம்பெயர்ந்தோரும் குடிபெயர்ந்தோரும் மதிய உணவை உண்பார்கள்.

உரோம் நகரிலுள்ள காரித்தாஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய உணவு வழங்கும் மையத்தில், ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான ஏழைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.