2018-06-18 14:18:00

வாரம் ஓர் அலசல் – விதைப்பதே விளைகிறது (பொதுநல சேவை தினம்)


ஜூன்,18,2018. ஒவ்வொரு நாளும் நகரப் பேருந்துகளில் பயணம் செல்லும்போது பல்வேறு மனிதர்களைச் சந்திக்கிறோம். சிலர் இருக்கையில் வந்து அமர்ந்தவுடன் எதிரில் இருப்பவரைப் பார்த்து ஒரு புன்முறுவல் காட்டுகிறார்கள். வேறு சிலர் இன்னும் ஒருபடி மேலேசென்று, வணக்கம் சொல்லி, பேச்சுக்கொடுக்கிறார்கள். இன்னும் சிலர், இறுக்கமான முகங்களுடன் உட்கார்ந்திருக்கிறார்கள். வாழ்த்துச் சொன்னால்கூட முகத்தைத் திருப்பிக்கொள்கிறார்கள். ஆனால், முன்பின் அறியாதவர்களிடம் நாம் பேசும் அன்பான ஒருசில வார்த்தைகள், ஒரு புன்சிரிப்பு.. எத்தனையோ பேருக்கு ஆறுதலாக இருப்பதாக அறிகின்றோம். சில இக்கட்டான நேரங்களில் நாம் கைகட்டி நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறோம். உண்மையில் அந்த மாதிரி நேரங்களில்தான் நமது உதவி மற்றவர்களுக்கு தேவைப்படுகிறது. சாலையைக் கடக்க முடியாமல் நின்றுகொண்டிருக்கும் வயதானவர்கள், பார்வையிழந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர்க்கு செய்யும் ஒரு நிமிட உதவி, உதவி செய்தவருக்கு ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தருகின்றது.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் பதினாறாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய ஆபிரகாம் லிங்கன் அவர்கள், ஒருமுறை காரில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் உள்ள சாக்கடையில் ஒரு பன்றிக்குட்டி சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவிப்பதைப் பார்த்தார். உடனே காரை நிறுத்த சொன்ன அவர், தானே சென்று அந்த பன்றிக் குட்டியை மேலே ஏற்றி விட்டுவிட்டு மீண்டும் புறப்பட்டு சென்றார். அந்தக் காரின் ஓட்டுனர் வியப்புடன் பார்த்தார். அப்போது ஆபிரகாம் லிங்கன் அவர்கள் சொன்னார் - இந்த பன்றிக் குட்டியை காப்பாற்றவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இருந்தாலும் இதைக் காப்பாற்றாமல் வந்த குற்ற உணர்வு என்னைத் தூங்க விடாது. அசிங்கத்தைவிட எனக்கு நல்ல தூக்கம் அவசியம்” என்று. லிங்கன் அவர்கள், நியூ ஆர்லியன்ஸ் நகரில் வாழ்ந்தபோது. 'அடிமைகள்' என்ற பெயரில் கறுப்பினத்தவர் விலைக்கு விற்கப்படுவதையும், இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும், சாட்டையால் அடிக்கப்படுவதையும், ஒட்டுமொத்தமாகக் கொடுமைப்படுத்தப்படுவதையும் கண்டார். அப்போது அவருக்கு வயது பதினைந்துதான். கறுப்பின மக்கள், விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்பட்டு, சுரண்டப்பட்டு, கொன்று குவிக்கப்பட்டுக்கொண்டிருந்த அடிமை முறையை நீக்குவதாக அறிவித்தவர் ஆபிரகாம் லிங்கன். 

மாக்களாக நடத்தப்பட்ட மக்களுக்காக முழுக்க முழுக்க உழைத்த அந்த மாமனிதர் லிங்கன், அதைப் பெருமிதமாக நினைக்கவில்லை .'முட்புதர்களை அகற்றி முட்கள் இருந்த இடங்களில் பூக்கள் மலரச்செய்தான் லிங்கன்' என்று வரலாறு என்னைக் குறிப்பிட்டாலே போதும் என்று சொன்னார் அவர். நான் வெல்வதைவிட உண்மையானவனாக இருக்க வேண்டும். நான் மாபெரும் வெற்றிகள் பெறுவதைவிட,  என் மனசாட்சியின்படியே வாழ விரும்புகிறேன். நியாயத்துக்காக யாரேனும் நின்றால் அவருடன் நான் தீர்க்கமாக உடனிருப்பேன் என்றவர் ஆபிரகாம் லிங்கன். மற்றவரின் நலனுக்காக, துன்புறுவோரின் துயர் அகற்ற தன்னையே குண்டுகளுக்குப் பலியாக்கியவர் ஆபிரகாம் லிங்கன். கவிஞர் பிறைசூடன் அவர்கள் சொன்னார் - மற்றவர்களிடம் அன்பாக இருப்பதுதான் ஆன்மிகம்'' என்று. இக்காலத்தில் பலர் மதச்சாயம் பூசிக்கொண்டு, அநியாயமாய் பல அப்பாவிகளைக் கொன்று குவித்து,  அநீதிகளுக்குமேல் அநீதிகளை ஆற்றி வருகின்றார்கள். சக மனிதர்கள், மனிதர்களாகவே அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. சாலையில் விபத்தில் அடிபட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவரைக் காப்பாற்ற முயற்சிக்காமல், அந்த மனிதரை வாட்சப்பில் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இன்றைய சமுதாயத்தில் தன்னலம் அதிகரித்து வருவதற்கு இதெல்லாம் சான்றுகள், அதேநேரம் நல்ல, சேவை மனம்கொண்ட உள்ளங்களும் உள்ளன.

அரசு மருத்துவமனை என்றாலே சுத்தமும் சுகாதாரமும் இருக்காது என்பது பரவலான எண்ணம். அதிலும் அங்குள்ள கழிப்பறைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். இப்படிப்பட்ட சூழலில் பல தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் வகையில் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் புற்றுநோய் சிகச்சை பிரிவு விளங்குகிறது. ஏழை எளிய நோயாளிகள் புழங்கக்கூடிய கழிப்பறைகளை, கருவறை போல சுத்தம் செய்யும் மகத்தான பணியை விஸ்வாஜெயம் எனப்படும் தொண்டு நிறுவனம் இலவசமாகச் செய்து வருகிறது. இந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் சேகர் விஸ்வநாதன் அவர்கள், சென்னையைச் சேர்ந்தவர். தனியார் நிறுவனம் ஒன்றின் மேலாளர். இவருக்குத் தெரிந்த ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இராயப்பேட்டை புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரைப் பார்ப்பதற்காக அங்குச் சென்றபோது மருத்துவமனையின் சுற்றுச்சுழல் சொல்லிக்கொள்வது போல இல்லை. மற்ற நோயாளிகளைவிட புற்று நோயாளிகள் சுத்தமான சூழலில் இருக்கவேண்டியது அவசியம் என்ற நிலையில், நிலைமை நேர்மாறாக இருக்கிறதே என்று மனம் வருந்திய அவர், மறுநாளே தீர்க்கமான முடிவு எடுத்தார். மருத்துவமனையின் சுத்தம் மற்றும் நலவாழ்வுக்கான பொறுப்பை முறைப்படி ஏற்றுக்கொண்டார் அவர். தனது மாத வருமானத்தில் இருந்தும், கையிருப்பில் இருந்தும் பணத்தைப்போட்டு கடந்த 2012ம் ஆண்டில் மருத்துவமனையை சுகாதாரமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றார் சேகர் விஸ்வநாதன்.

இராயப்பேட்டை புற்று நோய் மருத்துவமனை 90 ஆயிரம் சதுர அடியில், ஆறு மாடிகளுடன் உள்ளது. ஒவ்வாரு நாளும் வரக்கூடிய, வெளிநோயாளிகள், உள்நோயாளிகள், நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் மருத்துவமனையைச் சார்ந்தவர்கள் என, ஏறக்குறைய 700 பேர் இங்குள்ள கழிப்பறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஒரு நாளைக்கு எட்டு முறை கழிப்பறைகளும், தரைப்பகுதியும், நோயாளிகள் புழங்கும் வார்டு அறைகளும் சுத்தம் செய்யப்படுகிறது. பதினைந்து ஊழியர்கள் மாற்று முறையில், ஆண்டில் 365 நாட்களும் 24 மணி நேரமும் பணிபுரிகின்றனர். சுத்தம் செய்ய, சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. சேகர் விஸ்வநாதன் அவர்களின் இந்த 'சுத்தமான' நேர்மையான சேவையைப் பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும், நண்பர்கள் பலர் நன்கொடையாளர்களாக இவரது சேவையில் தங்களையும் இணைத்துக்கொண்டுள்ளனர். ஊழியர்கள் சம்பளம் மற்றும் உபகரணங்களின் தேவை என, மாதம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. நன்கொடையாளர்களின் ஆதரவு காரணமாக, தரையை விரைந்தும் ஈரமில்லாமலும் சுத்தம் செய்யக்கூடிய, நோயாளிகளின் படுக்கை விரிப்புகளை மழை நேரத்திலும் துவைத்து காயவைத்து தரக்கூடிய, 24 மணி நேரமும் சுகாதாரமான குடிநீர் வழங்கக்கூடிய, அறுவை சிகிச்சைக்குத் தேவைப்படும் உபகரணங்களை ஸ்டெரிலைஸ் செய்துதரக்கூடிய எந்திரங்கள் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது. முகமறியா ஏழை எளிய மக்களின் நலவாழ்வில் அக்கறை கொண்டு செயல்படும் சேகர் விஸ்வநாதன் அவர்களின் சேவையை அங்கீகரித்து மேலும் ஊக்கமும் உற்சாகமும் கிடைத்தால், அவர் தன் சேவையை இன்னும் பல அரசு மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்த எண்ணியுள்ளார் என செய்தியில் வாசித்தோம் (நன்றி தினமலர்).

திருக்கோவிலூர்-சங்கராபுரம் முக்கிய சாலை, மாவட்டத்திலேயே அதிகளவில் அபாய வளைவுகளைக் கொண்ட சாலையாக உள்ளது. இச்சாலையில், பகண்டை கூட்டுச் சாலை காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில், வாகன ஓட்டிகளுக்கான எச்சரிக்கை பலகைகள் நெடுஞ்சாலைத் துறையினரால் வைக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இப்பகுதியில் அபாயகரமான வளைவுகள் மற்றும் விபத்துப் பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கான எச்சரிக்கை பலகைகளை, ஏறக்குறைய இருபது இடங்களில் தனது சொந்த பொறுப்பில் நிறுவி, பொதுநல சேவை செய்துள்ளார், பகண்டை கூட்டுச் சாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோ.ராஜாராமன்.

ஜூன் 23, வருகிற சனிக்கிழமை, ஐ.நா.வின் பொதுநல சேவை நாள். தன்னலம் பாராமல் பொதுநலச் சேவைபுரியும் தன்னார்வலர்களை வாழ்த்துவோம். நமது பொதுநல சேவைகளும் வளரட்டும். நாம் வாழும்வரை நம்மை யாரும் வெறுக்கக் கூடாது. வாழ்ந்து முடித்தபின், யாரும் நம்மை மறக்கக் கூடாது. அதுதான் வாழ்வின் வெற்றி. எனவே, ஒவ்வொரு நாளையும், முந்தைய நாளைவிட சிறந்த நாளாக ஆக்க முயற்சிப்போம். எதை விதைக்கின்றோமோ அதுவே விளைகிறது. எனவே, நன்மையையே விதைப்போம். நல்லதை நோக்கியே நடப்போம். அப்போது நாளைய உலகம் நம் பின்னால் வந்தே தீரும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.