2018-06-18 15:56:00

ஏமன், புலம்பெயர்ந்த மக்களின் சார்பாக திருத்தந்தை


ஜூன்,18,2018. இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், ஏமன் நாட்டில் இடம்பெறும் சண்டையினால் கடும் மனிதாபிமான நெருக்கடிகள் இடம்பெறும்வேளை, அந்நாட்டில் அமைதி நிலவ செபிக்குமாறு விண்ணப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏமனின் Hudaydah துறைமுக நகரை, Houthi புரட்சியாளர்களிடமிருந்து கைப்பற்றுவதற்காக, சவுதி அரேபியப் படைகள், ஏமன் படைகளுடன் போரிட்டு வருவதால், ஏமனில் கடும் மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. ஏமனில் மூன்றாண்டுகளுக்கு மேலாக இடம்பெற்றுவரும் சண்டையில், குறைந்தது 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர், கடும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அச்சண்டையில் இதுவரை பத்தாயிரம் பேர் வரை பலியாகியுள்ளனர்.

ஏமன் நாட்டில் போரிடும் தரப்புகள் பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்குவதற்கு உலகளாவிய சமுதாயம் அவற்றை வற்புறுத்துமாறும், இதனால், அந்நாட்டில் ஏற்கனவே நிலவும் கடும் மனிதாபிமான நெருக்கடிகள், மேலும் மோசமடையாமல் இருப்பதற்கு உதவ முடியும் என்றும், திருத்தந்தை கூறினார்.

மேலும், ஜூன் 20, வருகிற புதன்கிழமையன்று உலக புலம்பெயர்ந்தவர் நாள் கடைப்பிடிக்கப்படுவதையும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயுத மோதல்கள் மற்றும் சித்ரவதைகளுக்கு அஞ்சி புலம்பெயரும் அனைத்து மக்களையும் இந்த உலக நாளில் நினைவுகூர்வோம் என்றும் கூறினார்.

இன்னும், வெனெசுவேலா நாட்டின் கரகாசில், Maria Carmen Rendiles Martinez அவர்கள் முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்டிருக்கும்வேளை, துன்புறும் அந்நாட்டு மக்களுக்காகச் செபிப்போம் என்றும் திருத்தந்தை கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.