2018-06-16 15:17:00

பொதுக் காலம் 11ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


பொதுக் காலம் 11ம் ஞாயிறு - ஞாயிறு வாசகங்கள்

I              இறைவாக்கினர் எசேக்கியல் 17 : 22-24 

II            கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 5: 6-10

மாற்கு நற்செய்தி 4 : 26-34

பொதுக் காலம் 11ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

மண், விதை, செடி, கொடி, மரம் என்று, இயேசு, தாவர உலகைப்பற்றியும், விதைப்பது, அறுவடை செய்வது என்று, விவசாயத்தைப்பற்றியும் உவமைகளில் பேசியிருக்கிறார். தச்சு வேலை செய்த இயேசுவுக்கு, தாவர உலகின் மீது எப்படி இவ்வளவு ஈடுபாடு வந்திருக்கமுடியும் என்று எண்ணி வியப்படைகிறோம். தன்னைச்சுற்றி இயங்கும் உலகில், இறைவனை, தொடர்ந்து சந்தித்துவந்த இயேசுவுக்கு, இயற்கையின் அதிசயங்கள் மனதில் பதிந்தது ஒன்றும் அதிசயம் இல்லையே!

சாதிக்கவேண்டும், சேகரிக்கவேண்டும் என்ற வெறியில், இயற்கைக்கு மாறாக, இரவையும் பகலாக்கி, இடைவிடாமல், அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் நம் மனங்களில் இந்த அதிசயங்களை மீண்டும் பதிக்க, இந்த ஞாயிறு வாசகங்கள் வழியே, பாடங்கள் சொல்லித் தர வருகிறார், இறைவன்.

இயற்கை என்ற பள்ளியில், இறைவன் நமக்குச் சொல்லித்தரும் பாடங்களைக் கவனமாகப் படித்திருந்தால், இயற்கையை அழிவிலிருந்து எவ்விதம் காப்பாற்றுவது என்று கவலைப்படும் நிலைக்கு நாம் வந்திருக்கத் தேவையில்லை. இயற்கையைவிட நாம் அறிவாளிகள் என்ற இறுமாப்பில், இறைவன் படைத்த இயற்கையை சின்னாபின்னமாக்கிவிட்டு, இப்போது, இறந்து கொண்டிருக்கும் இயற்கையை எப்படி உயிர்பிப்பது என்று உச்சி மாநாடுகள் நடத்தி வருகிறோம்.

ஒரு சில அரசுத் தலைவர்கள், தங்கள் சுயநலம், குறுகிய சிந்தனை இவற்றின் காரணமாக, இந்த உலக மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவிக்கும்போது, நம் உள்ளங்கள் பதைபதைக்கின்றன. அரசுத் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் ஒரு தனி மனிதரின் விளையாட்டுத்தனமான சிந்தனைகள், வருங்காலத் தலைமுறையினரை, எவ்வளவு தூரம் பாதிக்கக்கூடும் என்பதை உணரும்போது, செய்வதறியாது திகைக்கிறோம்.

குழப்பமும், அதிர்ச்சியும் நிறைந்த இத்தகையச் சூழலில், இன்றைய நற்செய்தி வழியாக இயேசு நமக்குச் சொல்லித்தரும் பாடங்களுக்குச் செவிமடுப்போம். மாற்கு நற்செய்தி 4ம் பிரிவில் இன்று நாம் வாசிக்கும் முதல் உவமை, "தானாக வளரும் விதை" என்ற உவமை. மாற்கு நற்செய்தியில் மட்டும் நாம் காணும் இந்த அழகிய உவமை இதோ:

மாற்கு நற்செய்தி 4 : 26-34

அக்காலத்தில், இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கிக் கூறியது: “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது” என்று கூறினார்.

கேட்பதற்கு மிக இனிமையான உவமை இது... வேளாண்மை, விவசாயம் என்பது மிகவும் எளிதான விடயங்கள் என்ற கற்பனையை, இயேசுவின் வார்த்தைகள் உருவாக்குகின்றன. விதைப்பவர் செய்யவேண்டியதெல்லாம், எளிதான காரியங்கள்... விதைக்கவேண்டும், காத்திருக்கவேண்டும், அறுவடை காலம் வந்ததும் அறுவடை செய்யவேண்டும்... அவ்வளவுதான். விதைப்பதற்கும், அறுவடை செய்வதற்கும் இடைப்பட்டக் காலத்தில், இயற்கை தானாகச் செயல்படும் என்ற கருத்தில் இயேசு பேசியிருக்கிறார். "அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது... நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது" என்பவை இயேசுவின் வார்த்தைகள்.

இந்த வார்த்தைகளைக் கேட்கும்போது, நமக்குள் கேலியான ஒரு புன்னகை எழுவதற்கு வாய்ப்புண்டு. இயேசுவுக்கு விவசாயம்பற்றி சரிவரத் தெரியவில்லை என்ற மமதையில் எழும் கேலிச்சிரிப்பு அது. ஆனால், இந்த உவமையின் ஆழத்தைப் புரிந்துகொண்டால், நம் கேலி மறைந்து, கேள்விகள் மனதை உறுத்துகின்றன. இந்த உவமையில், இயேசு சுட்டிக்காட்டுவது, எளிதான, இயற்கை வழிகள்... இந்த இயற்கை வழியில் நாம் சென்றிருந்தால்... நம் பேராசைகளுக்கும், அவசரங்களுக்கும் ஏற்றபடி இயற்கையை மாற்றாமல், அது செயல்படும் போக்கில் நாம் சென்றிருந்தால்... இயற்கையை இவ்வளவு சீரழித்திருப்போமா என்ற கேள்வி எழுகிறது.

இந்த உவமையில் இயேசு முக்கியமாக வலியுறுத்துவன... பொறுமை, நிதானம், நம்பிக்கை போன்ற அற்புத குணங்கள்... இந்த அற்புத குணங்கள், நாம் வாழும் உலகில், பெருமளவு காணாமற் போய்விட்டன. இன்றைய அவசர உலகின் கணக்குப்படி, இன்று விதைக்க வேண்டும், நாளையே அறுவடை செய்யவேண்டும். இன்று விதைப்பதை நேற்றே அறுவடை செய்ய முடியுமா என்ற ஆய்வுகள் தற்போது நடைபெற்று வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நமது அவசரத்துக்கு ஈடுகொடுக்கும் வண்ணம், தொழில் நுட்பங்கள், வேதியல் உரங்கள், விதைகளில் மரபணு மாற்றங்கள், திடீர் விதைகள், திடீர் பயிர்கள் என்று எத்தனை, எத்தனை விபரீதச் சோதனைகள். இந்தச் சோதனைகளின் தீய விளைவுகளால், ஆயிரக்கணக்கில் விவசாயிகளின் தற்கொலைகளும் நிகழ்ந்து வருகின்றன.

சுயநலம், பேராசை, குறுக்குவழி, உடனடித்தீர்வுகள், அவசரம், என்ற களைகளை ஆரம்பத்திலிருந்தே நமது தனிப்பட்ட வாழ்விலும், சமுதாய வாழ்விலும் நாம் வேரோடு களைந்திருந்தால், சுற்றுச்சூழலைப்பற்றி இவ்வளவு தூரம் கவலைப்பட்டிருக்கத் தேவையில்லை. 1992ம் ஆண்டு, முதல் பூமிக்கோள உச்சி மாநாட்டை நடத்தியிருக்கத் தேவையில்லை.

அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் சரிவர நடக்காமல் போனதால், மீண்டும், சில உலக உச்சி மாநாடுகளை நடத்தியுள்ளோம். அடிப்படையில் நமது மனித சமுதாயத்தில் ஆழமாய் வேரூன்றியிருக்கும் சுயநலத்தையும் அதன் கிளைகளாய் வளர்ந்திருக்கும் பேராசை, குறுக்குவழிகள் என்ற களைகளையும் நீக்காவிட்டால், மீண்டும், மீண்டும் உச்சி மாநாடுகள் மட்டும் நடைபெறுமே தவிர, நாம் முழு மனித வளர்ச்சியில் உச்சிகளை அடைவது கடினமாகி விடும்.

முதல் பூமிக்கோள உச்சி மாநாடு, 1992ம் ஆண்டு ரியோவில் நடைபெற்றபோது, செவர்ன் கல்லிஸ் சுசுகி (Severn Cullis Suzuki) என்ற 12 வயது சிறுமி உலகத் தலைவர்களிடம் 6 நிமிடங்கள் பேசினார். அச்சிறுமியின் சொற்கள், உலகத் தலைவர்களின் உள்ளங்களில் அம்புகளாய் பாய்ந்தன. அன்று, அச்சிறுமி சொன்ன கசப்பான உண்மைகள், இன்றும் இவ்வுலகில் நம்மை வாட்டியெடுக்கும் கேள்விகளாக ஒலிக்கின்றன. சிறுமி செவர்ன் சுசுகி சொன்ன ஒரு சில உண்மைகளுக்கு மீண்டும் செவி மடுப்போம்:

“நான் என் எதிர்காலத்திற்காகப் போராட வந்திருக்கிறேன். இன்று உலகில் பட்டினியால் இறக்கும் என்னைப்போன்ற ஆயிரமாயிரம் குழந்தைகள் சார்பில் பேச வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் உலகின் பல பகுதிகளில் அழிந்து வரும் உயிரினங்கள் சார்பில் நான் பேச வந்திருக்கிறேன்.

வெளியில் சென்று சூரிய ஒளியில் நிற்பதற்கோ, வெளிக் காற்றைச் சுவாசிப்பதற்கோ எனக்குப் பயமாக உள்ளது. இவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒவ்வொரு நாளும் நான் கேட்டு வருகிறேன். அதனால், எனக்குப் பயமாக உள்ளது.”

இவ்விதம் தன் உரையைச் சூடாக ஆரம்பித்த சிறுமி செவர்ன் சுசுகி, உலகத் தலைவர்களை நோக்கிச் சிலக் கேள்விகளை எழுப்பினாள். அன்று அம்புகளாய் அவர்களை நோக்கிப் பாய்ந்த அக்கேள்விகள், இன்று, நம்மையும் நோக்கி பாய்ந்து வருகின்றன.

“நீங்கள் சிறுவர்களாய் இருந்தபோது என்னைப் போல் சூரியனையும், காற்றையும் பற்றி பயந்தீர்களா? கவலைப் பட்டீர்களா? நான் வாழும் இந்த உலகில் நடக்கும் பயங்கரங்களுக்கு என்ன பதில் என்று சிறுமி எனக்குத் தெரியாது. உங்களுக்கும் அந்தப் பதில்கள் தெரியாது என்ற உண்மையை நீங்கள் உணர வேண்டும் என்று கூறவே நான் இங்கு வந்திருக்கிறேன்.

விண்வெளியில் ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டையை அடைக்க உங்களுக்குத் தெரியாது.

இறந்து போகும் உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்க உங்களுக்குத் தெரியாது.

காடுகள் அழிந்து பாலை நிலங்களாய் மாறிவருவதைத் தடுக்கும் வழிகள் உங்களுக்குத் தெரியாது.

உடைந்து போன இயற்கையைச் சரி செய்ய உங்களுக்குத் தெரியாதபோது, அதை மேலும் உடைக்காமல் விடுங்கள். அது போதும் எங்கள் தலைமுறைக்கு.”

செவர்ன் சுசுகி பேசப்பேச, பல உலகத் தலைவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. பலர் குற்ற உணர்வோடு அச்சிறுமியை ஏறெடுத்துப் பார்க்கவும் துணியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தனர். தொடர்ந்து உண்மைகளைப் பேசினாள் அச்சிறுமி.

“நான் வாழும் கனடாவில் நாங்கள் அதிகப் பொருட்களை வீணாக்குகிறோம். பல பொருட்களை முழுதாகப் பயன்படுத்தாமல் தூக்கி எறிகிறோம். அதே நேரத்தில், எத்தனையோ நாடுகளில் தேவைகள் அதிகம் இருக்கும் கோடிக்கணக்கானோர் வாழ வழியின்றி இறக்கின்றனர். தூக்கி ஏறிய எண்ணம் உள்ள எங்களுக்கு, இவற்றைப் பகிர்ந்து கொள்ள எண்ணம் எழுவதில்லை.

நான் சிறுமிதான். ஆனால், எனக்குத் தெரியும் சில உண்மைகள் ஏன் உங்களுக்குத் தெரிவதில்லை? நாம் இன்று போருக்குச் செலவிடும் பணத்தைக் கொண்டு இவ்வுலகின் ஏழ்மையை முற்றிலும் ஒழிக்க முடியும், நமது இயற்கையை காக்க முடியும் என்ற பதில்கள் எனக்குத் தெரிகிறதே; ஏன் உங்களுக்குத் தெரிவதில்லை?

சிறுமி செவர்ன் சுசுகி உலகத்தலைவர்களுக்கு குழந்தைப்பருவப் பாடங்கள் சிலவற்றை நினைவுறுத்தினார்.

குழந்தைகளாய் நாங்கள் வளரும்போது, எங்களுக்குப் பல பாடங்கள் சொல்லித் தருகிறீர்கள்:

மற்ற குழந்தைகளுடன் சண்டை போடக்கூடாது;

மற்றவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்;

நாங்கள் போட்ட குப்பையை நாங்களே சுத்தம் செய்ய வேண்டும்;

மற்ற வாயில்லா உயிரினங்கள் மேல் பரிவு காட்ட வேண்டும்;

எங்களிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்; எல்லாவற்றையும் நாங்களே வைத்துக் கொள்ளக் கூடாது...

என்று எங்களுக்கு எத்தனைப் பாடங்கள் சொல்லித் தருகிறீர்கள். பிறகு, நீங்கள் ஏன் இந்தப் பாடங்களுக்கு எதிராக நடந்து கொள்கிறீர்கள்?”

இறுதியாக, அச்சிறுமி அவர்கள் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் வகையில் பேசி முடித்தாள்.

“நீங்கள் ஏன் இந்தக் கருத்தரங்கை நடத்துகிறீர்கள் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் குழந்தைகளாகிய எங்களுக்கு,  நல்லவைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே கூடியிருக்கிறீர்கள். நாங்கள் எவ்வகையான உலகில் வாழப்போகிறோம் என்பதை நீங்கள் தீர்மானிக்க வந்திருக்கிறீர்கள்.

பயந்து கலங்கிப் போயிருக்கும் குழந்தைகளைப் பெற்றோர் அரவணைத்துத் தேற்றும்போது, ‘எல்லாம் சரியாகிப் போகும்’ என்று சொல்லி குழந்தைகளைச் சமாதானம் செய்வார்கள். எங்கள் தலைமுறைக்கு இந்த வார்த்தைகளை உங்களால் சொல்ல முடியுமா? ‘எல்லாம் சரியாகிப் போகும்’ என்று மனதார உங்களால், எங்களைப் பார்த்து சொல்ல முடியுமா? எங்கள் மீது அன்பு கொண்டிருப்பதாக நீங்கள் அடிக்கடி சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மையென்றால், அதைச் செயலில் காட்டுங்கள்.  இது நான் உங்கள் முன் வைக்கும் ஒரு சவால். இதுவரைப் பொறுமையுடன் எனக்குச் செவி மடுத்ததற்கு நன்றி.”

அந்த ஆறு நிமிடங்கள் உலகச் சமுதாயத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி, சங்கடமான கேள்விகளை விட்டுச் சென்றாள், அச்சிறுமி. செவர்ன் சுசுகி அன்று எழுப்பிய அந்தக் கேள்விகள் இன்றும் நமக்கு எழுப்பப்படுகின்றன. இக்கேள்விக் கணைகள் நம்மீது பாயும்போது, நாமும் தலைகுனித்து நிற்க வேண்டியுள்ளது.

மனிதச்சமுதாயம் இன்னும் இயற்கைக்கு இழைத்து வரும் அழிவுகளை நிறுத்தாததால், இயற்கையும், தன் சீற்றத்தை, அவ்வப்போது, வெள்ளம், சூறாவளி, சுனாமி என்ற பல வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றது. கேட்கச் செவி உள்ளவர்கள்தாமே நாம்... இந்த எச்சரிக்கைகளைச் சரியாகக் கேட்டிருக்கிறோமா?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.