2018-06-16 15:36:00

குடும்பம், கடவுளின் திட்டத்தின் மையம்


ஜூன்,16,2018. இத்தாலியில் குழந்தை பிறப்பு அதிகரிப்புக்கு ஆதரவளிப்பதிலும், குழந்தைகளுக்கு ஆதரவாக கொள்கைகள் உருவாக்கப்படுவதன் முக்கியத்துவத்தை நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் ஒருபோதும் மனம்தளர வேண்டாமென, ஓர் இத்தாலிய குடும்பநல அமைப்பினரிடம் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

குடும்ப கழகங்கள் கூட்டமைப்பின் ஏறக்குறைய 150 பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமை நண்பகலில் வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு நாட்டின் மிகப்பெரும் முதலீடாகவும், அதன் வருங்கால வளமைக்கு முதன்மையான காரணமாகவும் குழந்தைகள் இருக்கும்வேளை, அவர்களின் பிறப்பு, குடும்பங்களின் வறுமைக்குக் காரணம் என அடிக்கடி சொல்லப்படுகின்றது, பல நிலைகளில் குடும்பங்கள் போதுமான உதவிகளைப் பெறாமல் இருப்பதே இதற்குக் காரணம் என்று கூறினார்.

இப்பிரச்சனையும், ஏனைய பிரச்சனைகளும், மனஉறுதி மற்றும் பிறரன்புடன் எதிர்கொள்ளப்பட வேண்டும் என்றும், குடும்பங்கள் மீது காட்டப்படும் அக்கறை, மனிதரின் மாண்பை அடிப்படையாகக் கொண்டிருப்பதாய் இருக்க வேண்டும் என்றும் உரைத்த திருத்தந்தை, குடும்பம் மற்றும் மனித வாழ்வுக்கு ஆதரவாக, இந்த அமைப்பினர் ஆற்றிவரும் பணிகளை ஊக்குவித்தார்.  

குடும்ப கழகங்கள் கூட்டமைப்பு, குடும்பங்களின் அழகை உணர்த்துவதற்கு, கடந்த 25 ஆண்டுகளாக எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டிய திருத்தந்தை, இந்த அமைப்பினர் பல்வேறு வழிகளில் ஊக்குவிக்கும் குடும்பம், கடவுளின் திட்டத்தின் மையமாகும் என்றும், குடும்பம், மனித வாழ்வின் தொட்டில் என்றும் கூறினார்.

இந்த அமைப்பினர், அன்பின் மகிழ்வுக்குச் சான்றுகளாய் வாழுமாறும், தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.