2018-06-15 16:03:00

பெண்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது கடவுளுக்கு எதிரான..


ஜூன்,15,2018. புறக்கணிக்கப்பட்ட மற்றும், சுயநலத்திற்காகப் பயன்படுத்தப்படும் பெண்களுக்காகவும், வேலை கிடைப்பதற்காக தங்களின் மாண்பை விற்கும் சிறுமிகளுக்காகவும் செபிப்போம் என்று, இவ்வெள்ளிக்கிழமை காலையில் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், விசுவாசிகளிடம் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று என்று தொடங்கும், மத்தேயு நற்செய்தி (மத்.5,27-32) பகுதி, இந்நாளைய திருப்பலியில் நற்செய்தி வாசகமாக வாசிக்கப்பட, அந்த வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவின் இந்த கடுமையான சொற்கள், வரலாற்றை மாற்றியது என்றும், அதற்குமுன்னர், பெண்கள், இரண்டாம்தரமாக நோக்கப்பட்டு, முழு சுதந்திரத்தைக்கூட அனுபவிக்காமல் அடிமையாக நடத்தப்பட்டனர் என்றும் உரைத்த திருத்தந்தை, இக்காலத்திலும், பெண்கள், பல்பொருள் அங்காடியில் விற்பனையாகும் பொருள்கள் போன்று பயன்படுத்தப்படுகின்றனர் என்று கூறினார்.

இந்நிலையைக் காண நாம் வேறெங்கும் செல்லத் தேவையில்லை, நாம் வாழும் இடங்களில், அலுவலகங்களில், நிறுவனங்களில், பெண்கள் வீணாகும் பொருளாக நோக்கப்படுவதைக் காணலாம் என்று கூறியத் திருத்தந்தை, இந்நிலை, கடவுளுக்கு எதிரான பாவம் என்று குறிப்பிட்டார்.

பெண்கள் இன்றி, ஆண்களாகிய நாம், கடவுளின் சாயலிலும், உருவத்திலும் இருக்க இயலாது என்றும், எத்தனையோ பெண்களும், புலம்பெயர்ந்த பெண்களும், சந்தைப் பொருள்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர், இந்நிலையை, நகரத்தின் சில பகுதிகளில் இரவில் பயணம் செய்யும்போது காணலாம் என்றும் திருத்தந்தை கூறினார்.

பெண்கள் இவ்வாறு பயன்படுத்தப்படும்போது, கடவுளின் உருவத்தையே அவமதிக்கின்றோம் என்று கூறியத் திருத்தந்தை, இயேசுவும் ஓர் அன்னையைக் கொண்டிருந்தார், அவரின் திருப்பணியில் பல நண்பர்கள் அவரைப் பின்சென்று, அவருக்கு ஆதரவாக இருந்தனர், அதேநேரம், பல பெண்கள் இகழ்வாக நோக்கப்பட்டதையும், புறக்கணிக்கப்பட்டதையும் இயேசு கண்டார், எனவே அவர் கனிவோடு அவர்களின் மாண்பைக் காத்தார் என்று சொல்லி, மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.