2018-06-14 16:13:00

திருத்தந்தை – புலம்பெயர்ந்தவர், ஒரு மனிதாபிமான சவால்


ஜூன்,14,2018. புலம்பெயர்ந்தவர்கள், தாங்கள் புறப்பட்ட நாட்டிலிருந்து, வந்து சேரவேண்டிய நாடுவரை, அவர்களின் நிலைகள் ஏற்கப்பட்டு, தேவைகள் நிறைவேற்றப்படுவதற்கு, உலகளாவிய சமுதாயத்தின் உதவி அவசியம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று கூறினார்.

மெக்சிகோ நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே அரசியல் உறவுகள் மீண்டும் உருவாக்கப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, புலம்பெயர்ந்தவர் குறித்து, ஜூன் 14, இவ்வியாழனன்று வத்திக்கானில் நடைபெற்ற கூட்டத்திற்கு செய்தி அனுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தேவையில் இருப்போர் மற்றும் சமூகத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டவர்கள் சார்பில் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவதற்கு, இத்தூதரக உறவு உதவும் என்று கூறியுள்ளார்.

புலம்பெயர்வோர் குறித்தும், குடிபெயர்வோர் பாதுகாப்பாகவும், விதிமுறைகளின்படியும் சேரவேண்டிய நாடுகளைச் சென்றடைவது குறித்தும், இரு உலகளாவிய ஒப்பந்தங்கள் தயாரிக்கப்பட்டுவரும்வேளை, நீதி, ஒருமைப்பாடு, பரிவிரக்கம் ஆகிய விழுமியங்களின் அடிப்படையில், உலகளாவிய புலம்பெயர்தல் நிர்வகிக்கப்படுவதற்கு, இக்கூட்டத்தினர் எடுத்துவரும் முயற்சிகளை ஊக்கப்படுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புலம்பெயர்வோர் விவகாரம், வெறும் எண்ணிக்கையாக நோக்கப்படாமல், புலம்பெயரும் ஒவ்வொருவரும், தங்களின் வரலாறு, கலாச்சாரம், உணர்வுகள், ஏக்கங்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கும் மனிதர்களாக நோக்கப்படுமாறு கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, இந்த நம் சகோதரர், சகோதரிகளுக்குத் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

புலம்பெயர்வோரின், குறிப்பாக, சிறார், அவர்களின் குடும்பங்கள், மனிதவர்த்தகத்திற்குப் பலியாகுவோர், மோதல்களால் புலம்பெயர்ந்தவர்கள், இயற்கைப் பேரிடர்கள், சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டோர் போன்றோரின் அடிப்படை உரிமைகளும், மாண்பும் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் திருத்தந்தை வலியுறுத்தினார். 

மெக்சிகோ நாட்டு திருப்பீட தூதரகம், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறை, திருப்பீட அறிவியல் கழகம், திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின்  புலம்பெயர்வோர் மற்றும் குடிபெயர்வோர் அமைப்பு ஆகிய அனைத்து துறைகளும் இணைந்து இக்கூட்டத்தை நடத்தின.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.