2018-06-14 15:43:00

உலகளாவிய கத்தோலிக்கரின் எண்ணிக்கை 140 கோடி


ஜூன்,14,2018. உலக அளவில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை அதிகரித்து, 140 கோடியாக உயர்ந்துள்ளது எனவும், ஆயர்கள், நிரந்தரத் திருத்தொண்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன எனவும், அருள்பணியாளர்களின் எண்ணிக்கை குறையாமலும், அதேநேரம், துறவறத்தார் மற்றும் குருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தும் உள்ளன எனவும், திருஅவையின், ஆண்டு புள்ளிவிவர நூல் கூறுகிறது.

5353 ஆயர்களும், 46,312 நிரந்தர திருத்தொண்டர்களும் உள்ளனர் என்று கூறும் அந்நூல், 2010க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில், அருள்பணியாளர்களின் எண்ணிக்கை 0.7 விழுக்காடு அதிகரித்து, அவ்வெண்ணிக்கை, 4,12,236லிருந்து 4,14,969 ஆக அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கின்றது.

உலக அளவில் திருமுழுக்குப் பெற்றுள்ள கத்தோலிக்கரின் எண்ணிக்கை, 2015ம் ஆண்டில் 125 கோடியே 80 இலட்சமாக இருந்தது, அவ்வெண்ணிக்கை 2016ம் ஆண்டில் 129 கோடியே 90 இலட்சமாக அதிகரித்துள்ளது எனக் கூறும் அந்நூல், உலக அளவில் திருமுழுக்குப் பெற்றுள்ள கத்தோலிக்கரின் எண்ணிக்கை அமெரிக்காவில் அதிகம் (48.6%) எனவும், ஆப்ரிக்காவில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது எனவும், அக்கண்டத்தில் 2010ம் ஆண்டில் 18 கோடியே 50 இலட்சமாக இருந்த அவ்வெண்ணிக்கை 2016ம் ஆண்டில் 22 கோடியே 80 இலட்சமாக உயர்ந்துள்ளது எனவும் கூறுகிறது.

ஆசிய மக்கள் தொகையில் 11 விழுக்காட்டினர் கத்தோலிக்கர் என்றும், இறையழைத்தல்கள் ஆசியாவில் அதிகரித்து வருகின்றன என்றும் தெரிவிக்கும் அந்நூல், உலக மக்கள் தொகையில் அறுபது விழுக்காட்டினருக்கு மேல் வாழும் ஆசியாவில், தென்கிழக்கு ஆசியாவிலுள்ள 76 விழுக்காடு கத்தோலிக்கரில் அதிகமானோர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ளனர் என்றும், இந்தியாவில், 2 கோடியே 20 இலட்சம் கத்தோலிக்கர் உள்ளனர் என்றும் கூறுகிறது.

2010ம் ஆண்டில், 7 இலட்சத்து 22 ஆயிரமாக இருந்த வார்த்தைப்பாடு கொடுத்த பெண் துறவியரின் எண்ணிக்கை, 2016ம் ஆண்டில் 6 இலட்சத்து 59 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.