2018-06-12 15:51:00

கொரிய தீபகற்பத்தில் நம்பிக்கையின் அடையாளங்கள் தெரிகின்றன‌


ஜூன்,12,2018. வட கொரியாவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள், கொரிய தீபகற்பத்திற்கும், ஆசியாவுக்கும், உலகமனைத்திற்கும் அமைதியை நோக்கிய முக்கிய படியாகவும், நம்பிக்கையின் முக்கிய தருணமாகவும் இருந்தது என்றார் தென்கொரிய ஆயர் Lazzaro You Heung-sik.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களுக்கும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் அவர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் வழி, பெரியதொரு மாற்றத்தை நோக்கி கொரிய தீபகற்பம் சென்று கொண்டிருப்பதையும், வடகொரியாவில் மிக விரைவில் அணுஆயுதக் களைவு இடம்பெற உள்ளதையும் பற்றி மகிழ்ச்சியை வெளியிட்ட தென்கொரியாவின் Daejeon ஆயர் Lazzaro You அவர்கள், தூய ஆவியாரின் செயல்பாடுகளை இந்நாட்களில் காணமுடிகிறது என்றும், இதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதாகவும் கூறினார்.

தென்கொரிய அரசுத் தலைவர் Moon jae-in அவர்கள், தன் பதவிக்கு வந்தவுடனேயே அமைதிக்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டதன் பலன்களை தற்போது நேரடியாகக் காணமுடிகின்றது என்ற ஆயர் Lazzaro You அவர்கள்,  வட கொரிய மற்றும் அமெரிக்க தலைவர்களிடையே வார்த்தைகளால் வழங்கப்பட்டுள்ள அமைதி வாக்குறுதிகள், மன்னிப்பு மற்றும் ஒப்புரவின் பாதையில் செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.