2018-06-09 15:26:00

அர்ஜென்டீனா மறைசாட்சிகளின் வீரத்துவ சாட்சிய வாழ்வு


ஜூன்,09,2018. அர்ஜென்டீனா நாட்டின் La Rioja மறைமாவட்டத்தில் கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கொல்லப்பட்ட நான்கு மறைசாட்சிகளின் வீரத்துவ வாழ்வு பற்றிய விவரங்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதற்கு நன்றி தெரிவித்து, மேய்ப்புப்பணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அம்மறைமாவட்ட ஆயர் Marcelo Daniel Colombo.

1976ம் ஆண்டில் மறைசாட்சியான ஆயர் Enrico Angelelli அவர்கள், La Rioja மறைமாவட்ட ஆயராகப் பணியைத் தொடங்கியதன் ஐம்பதாம் ஆண்டு அண்மித்துவரும்வேளை, நம் மறைசாட்சிகளை, முத்திப்பேறு பெற்றவர்கள் என அறிவிக்கும் நிகழ்வுக்காகத் தயாரிப்போம் எனவும் கூறியுள்ளார், ஆயர் Daniel Colombo.

வரும் வாரங்களில், முத்திப்பேறு பெற்ற நிகழ்வு குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் ஆயர், தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மறைசாட்சியான ஆயர் Enrico Angelelli அவர்கள், அர்ஜென்டீனாவில் புகழ்பெற்றிருந்த ஆயர்களில் ஒருவர் என்றும், அந்நாட்டின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான தனது கண்டனத்தை அவர் மறைவாக ஆற்றவில்லை எனவும், எப்போதும் ஒரு காது மக்கள் பக்கமும், மற்றொரு காது நற்செய்தியின் பக்கமும் திரும்பியிருக்க வேண்டும் எனவும் கூறியவர். இவர், அந்நாட்டில் இராணுவ சர்வாதிகார ஆட்சி அமைக்கப்பட்ட குறுகிய காலத்தில், 1976ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, சதித்திட்ட கார் விபத்தில் காலமானார். இது நடந்து 38 ஆண்டுகள் சென்று, ஆயர் கொல்லப்பட்டது தொடர்பாக, 2014ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி, இரு மூத்த அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

La Rioja மறைமாவட்டத்தில் பணியாற்றிய மறைசாட்சியான, முப்பது வயது நிரம்பிய இளம் பிரான்சிஸ்கன் அருள்பணி Carlos Murias அவர்களை, Chamical என்ற ஊரில் ஏழைகளுக்குப் பணியாற்ற அனுப்பினார், ஆயர். அவ்விடத்தில் அவர் ஏழை விவசாயிகளின் பாதுகாப்பிற்காகத் தன்னை அர்ப்பணித்து பணியாற்றியதால், இராணுவத்தால் சந்தேகத்துடன் நோக்கப்பட்டார். இவரும், 45 வயதான Chamical பங்குத்தந்தை Gabriele Longueville யும், 1976ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி கொல்லப்பட்டனர்.

அதேபோல், கிராம கத்தோலிக்க இயக்கத்தை நடத்திய விவசாயியான Venceslao Pedernera அவர்களும், அவரின் வீட்டில், அவரின் மனைவி மற்றும் மகள்களின் முன்னிலையில், நான்கு மனிதர்களால், 1976 ஆண்டு ஜூலை 25ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.