2018-06-08 16:30:00

மியாவ் மறைமாவட்டத்திற்கு புதிய துணை ஆயர்


ஜூன்,08,2018. வடகிழக்கு இந்தியாவிலுள்ள மியாவ் (Miao) மறைமாவட்டத்தின் துணை ஆயராக, தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சலேசிய அருள்பணியாளர் டென்னிஸ் பனிப்பிச்சை (Dennis Panipitchai) அவர்களை, இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தமிழகத்தின் கோட்டாறு மறைமாவட்டத்தைச் சார்ந்த கொளச்சல் எனும் ஊரில், 1958ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி பிறந்த புதிய துணை ஆயர் டென்னிஸ் பனிப்பிச்சை அவர்கள், 1976ம் ஆண்டில், ஷில்லாங்கில், சலேசிய சபையில் சேர்ந்தார்.

1991ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி, சலேசிய சபையில் வார்த்தைப்பாடுகளை எடுத்து, அதேநாளில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் புதிய துணை ஆயர் டென்னிஸ்.

சலேசிய சபையில் பல பொறுப்புக்களை வகித்த இவர், 2015ம் ஆண்டு முதல், இம்பால் உயர்மறைமாவட்டத்தில், Chingmeirong அமல அன்னை பங்கில், பங்குக் குருவாகப் பணியாற்றி வந்தார். இவர், இறையியல் மற்றும் பொருளியியலில் முதுகலைப்பட்டங்களைப் பெற்றிருப்பவர்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்திலுள்ள Miao மறைமாவட்டம், 2005ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி Dibrugarh மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிய மறைமாவட்டமாக உருவானது. அதன் முதல் ஆயராக, சலேசிய சபையின் George Palliparampil அவர்கள் பணியாற்றி வருகிறார். Miao மறைமாவட்டத்தில் 31 பங்குத்தளங்களில் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்கர் உள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.