2018-06-06 15:10:00

லைபீரியா - புதிய அரசுத்தலைவருக்கு நிறைய சவால்கள்


ஜூன்,06,2018. ஆப்ரிக்க நாடான லைபீரியாவில், நாட்டின் தலைமைத்துவத்தால் புறக்கணிக்கப்பட்டதாக உணரும் இளையோரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய அரசுத்தலைவருக்கு, அதிக அளவில் சவால்கள் காத்திருக்கின்றன எனவும், கத்தோலிக்கத் திருஅவை அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றது எனவும், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் Anthony Fallah Borwah அவர்கள் கூறினார்.

அத் லிமினா சந்திப்புக்காக உரோம் வந்திருக்கும் ஆயர் Borwah அவர்கள், பீதேஸ் செய்திக்கு அளித்த பேட்டியில், முன்னாள் கால்பந்து வீரரான George Weah அவர்கள், லைபீரியாவின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றும், இவர் இளையோரின் வெற்றிக் கதையை குறித்து நிற்கிறார் என்றும் கூறினார்.

ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், அரசுத்தலைவர் பணியை குறுகிய காலத்தில் கற்றுக்கொள்வது கடினம் என்றும், மக்கள் பொறுமையிழந்து இருப்பதால், இவர் விரைவில் தன் பணியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆயர் கூறினார்.

நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால், பெருமளவான மக்களைப் பாதித்திருக்கின்ற ஏழ்மை மற்றும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை முதலில் களையப்பட வேண்டும் என்றுரைத்த ஆயர் Borwah அவர்கள், புதிய அரசுத்தலைவர் நல்லவர் மற்றும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கத் திருஅவை தயாராக உள்ளது என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.