2018-06-04 15:39:00

வாரம் ஓர் அலசல் – பிளாஸ்டிக் மாசுகேடு பற்றி முரசறைவோம்


ஜூன்,04,2018 ஜூன் 05, இச்செவ்வாய் உலக சுற்றுச்சூழல் தினம். “பிளாஸ்டிக் மாசுகேடு பற்றி பறைசாற்றுவோம் உன்னால் மறுபடியும் பயன்படுத்த முடியாதெனில், அதனைப் புறக்கணித்துவிடு (Beat Plastic Pollution : If you can’t reuse it, refuse it)” என்ற தலைப்பில், இந்த உலக நாளை ஐ.நா. நிறுவனம், இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கிறது. நாளுக்கு நாள் இப்பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு, பனிப்பாறைகள் உருகுதல், கடல்நீர் மட்டம் உயர்வு, உலகின் பல பகுதிகளில் புயல் வெள்ளம், வேறு பல பகுதிகளில் மழையின்றி வறட்சி போன்றவற்றை அனுபவித்துவரும் இன்றைய உலகில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஆர்வம் அதிகம் காணப்பட்டாலும், இது குறித்த விழிப்புணர்வு மேலும் தேவைப்படுகின்றது எனச் சொல்லப்படுகின்றது. சுவாசிக்க சுத்தமான காற்று இல்லை. நிலம் மாசடைந்துவிட்டது. நலமாக வாழ வழியில்லை என்பதே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னணி. மேலும், மக்கிப்போகாத பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்பட்டுவரும் பாதிப்புகளும் இக்காலத்தில், மக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகின்றன. விலைக்கு வாங்கும் தண்ணீர் பாட்டில்கள் முதல், பிளாஸ்டிக் பொருள்களை, பலவாறு பயன்படுத்தும் நாம், அவை ஏற்படுத்தும் கடும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றியும் தெரிந்திருப்பது முக்கியம்.

இன்று பிளாஸ்டிக் மாசுகேடு ஒரு கொள்ளைநோயாக மாறியுள்ளது. உலகில், ஒவ்வொரு நிமிடத்துக்கும், பத்து இலட்சம் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் விலைக்கு வாங்கப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஐம்பதாயிரம் கோடி வரை பிளாஸ்டிக் பைகள் குப்பையில் போடப்படுகின்றன. மொத்தத்தில், மனிதர் தனிப்பட்ட பயன்பாட்டுக்கென, ஐம்பது விழுக்காட்டு பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துகின்றனர். மேலும், நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி, குப்பைகளில் கொட்டப்படுவதில்லை. மாறாக அவை கண்ட இடங்களில் வீசப்பட்டு, இறுதியில் பெருங்கடல்களில் சேர்கின்றன. மேலும், அவை இயற்கையைப் பாதிக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடியே முப்பது இலட்சம் டன் வரை பிளாஸ்டிக் கழிவுகள் பெருங்கடல்களில் கலந்து, பவளப்பாறைகளைச் சேதப்படுத்துகின்றன மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக உள்ளன. இக்கழிவுகளால், ஆண்டுதோறும், பத்து இலட்சம் கடல்பறவைகளும், ஒரு இலட்சம் கடல்வாழ்பாலூட்டிகளும் இறக்கின்றன. பெருங்கடல்களில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள், இந்தப் பூமியை ஓராண்டில் நான்குமுறைகள் சுற்றிவந்துவிடும். அவை முழுவதும் அழிவதற்குமுன்னர், ஆயிரம் ஆண்டுகள்வரை அவை மக்காமல் இருக்கும். இவை, நீர் விநியோகப் பாதையையும் அடைத்து, நம் உடலுக்கும் சேதத்தை உண்டாக்குகின்றன. பிளாஸ்டிக்கிலுள்ள வேதிப் பொருள்கள் பல நச்சுத்தன்மை கொண்டவை. அவை நம் சுரப்பிகளைப் பாதிக்கும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 2014ம் ஆண்டு மொத்தம் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கின் அளவு, 311 மில்லியன் டன்கள். இதுவே 2050ம் ஆண்டில் 1,124 மில்லியன் டன்களாக இருக்கும். இந்நிலை தொடர்ந்தால், 2050ம் ஆண்டில் கடலில் மீன்களின் எடையைவிட, குவிந்திருக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது உலக பொருளாதார அவை(WEF).

பெருங்கடலில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகளைச் சுத்தம் செய்யும் முறை பற்றியும் இளைஞர் ஸ்லாட் சொல்லியிருக்கிறார். கடல்களில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் பெரும்பாலும் தேங்கியிருப்பது கடல் சுழல்களில்தான். கடலின் நீரோட்டம் வட்டவடிவமாக, ஒரே இடத்தில், பெரிய பரப்பளவில் சுற்றிவரும் இடமே, சுழல் அல்லது சுழி எனப்படும். உலகில் கண்டங்களுக்கிடையே, மொத்தம் ஐந்து கடல் சுழிகள் இருக்கின்றன. அதில் அதிகம் குப்பைகள் சேர்வது, வட பசிபிக் சுழியில்தான். இதனைத்தான் 2020ம் ஆண்டிற்குள் சுத்தப்படுத்தவிருக்கிறார் ஸ்லாட். தற்போதைய தொழில்நுட்பங்களைக் கொண்டு, கப்பலில் சென்று, வலைவீசி எல்லா பிளாஸ்டிக்கையும் அள்ளிவிட முடியும். ஆனால் அதற்காகும் செலவு பலகோடிகள். ஆனால் ஸ்லாட்டின் தொழில்நுட்பம் ‘கடல் தன்னைத்தானே சுத்தம்செய்துகொள்ளும் முறை’.  அதாவது கடலின் சுழியில், ஓடும் நீரோட்டத்தின் நடுவில், V வடிவில் நீளமான பிளாஸ்டிக் தடுப்புகள் ஏற்படுத்தப்படும். இவை அசையாதவாறு, கடலின் அடிமட்டத்தோடு இணைக்கப்பட்டிருக்கும். இந்த சுழியினுள் மிதந்துவரும் பிளாஸ்டிக் குப்பைகள், இந்த தடுப்புகளால் தடுத்து நிறுத்தப்படும். அதேசமயம் கடல்வாழ் உயிரினங்களுக்குத் தடுப்பாக இல்லாமல், நீருக்கு அடியில் வழிவிடும். இப்படி கடலின் நீரோட்டம் ஒரு சுற்று முடியும் தருவாயில், அதில் மிதக்கும் மொத்த பிளாஸ்டிக்கும்,  V வடிவ தடுப்பின் மையத்தில் தேங்கியிருக்கும். பின்னர் கப்பலில் போய், எளிதாக அவற்றை அள்ளிக்கொண்டு வந்துவிடலாம். ஏற்கனவே சோதித்துப்பார்த்த இந்த தொழில்நுட்பம் வெற்றியடையவே, சுற்றுசூழல் ஆர்வலர்கள், இந்த திட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கையில் இருக்கின்றனர்.

 ஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பையை அகற்ற ஆகும் செலவு வெறும், 4.5 டாலர்தான். இந்த முறையின்படி, பசிபிக்கின் பாதிக்கழிவுகளை, இன்னும் பத்து ஆண்டுகளில் நீக்கிவிடலாம். அதேபோல, பிளாஸ்டிக்கின் கெட்ட தன்மையாக இருந்த, வேதிப்பொருள்களைக் கிரகிக்கும் திறன் தற்போது, நன்மை அளிக்கும் என்கிறார் ஸ்லாட். காரணம் கடலில் இருக்கும் பெரும்பாலான வேதிப்பொருட்களை இந்த பிளாஸ்டிக் குப்பைகள் கிரகித்துக்கொள்ளும். அவற்றை நாம் நீக்கிவிட்டால், வேதிப்பொருட்களும் நீங்கிவிடும். மேலும், நாம் தற்போது பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் ஐந்து விழுக்காடுகூட, முழுமையாக மறுசுழற்சிக்குச் செல்வதில்லை. ஆனால் இப்படி கடலில் இருந்து எடுக்கும், டன் கணக்கான பிளாஸ்டிக் குப்பைகளை ஆடைகளாக, பொருள்களாக மறுசுழற்சி செய்வதன் மூலம், ஐந்து இலட்சம் மில்லியன் டாலர்கள் வருமானமும் பெறமுடியும் என அறிவித்துள்ளார் ஸ்லாட். இந்த பணத்தைக்கொண்டு, மேலும் சுற்றுசூழல் சீரமைப்புக்கு செலவிடலாம். இந்த திட்டத்தைக்கொண்டு, கடலில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில், 99.85 விழுக்காட்டை நாம் அகற்றலாம் என்கிறார் ஸ்லாட்.

நிலத்திலிருந்து வருகின்ற பெருங்கடல் மாசுபாடு பெரும்பாலும் ஆசியாவிலுள்ள பத்து ஆறுகளில் இருந்து வருவதாக ஓர் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த ஆறுகளிலிருந்து கடலில் கலக்கின்ற பிளாஸ்டிக் பொருள்களை ஐம்பது விழுக்காடு குறைப்பதன் வழியாக, உலக அளவில் பெருங்கடலில் கலக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் 37 விழுக்காட்டை குறைக்க முடியும் என்றும், அந்த மையம் தெரிவித்திருக்கிறது. ஆஸ்திரேலிய கடல்பரப்பு "பிளாஸ்டிக் சூப்" ஆக மாறியுள்ளதாம். ஆஸ்திரேலிய பெருங்கடலினுள், ஏறக்குறைய 3,500 கோடி பிளாஸ்டிக் கழிவுத்துண்டுகள் காணப்படுவதாக அவர்கள் மதிப்பிட்டுள்ளனர். உலகின் கடல் பறவைகளில் தொண்ணூறு விழுக்காட்டின் வயிற்றில் சிறிதளவிலாவது பிளாஸ்டிக் இருக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

பிளாஸ்டிக்குகளை ஒழிக்க, தமிழகத்தின் கரூர் மாவட்ட நிர்வாகம், புதிய தொழில்நுட்ப முறையில் சாலைகள் அமைத்து, நல்ல வழியை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய ஈரச் செயல்முறை (CMR Bitplast-Wet Process) தொழில்நுட்பத்தில் திட்டமிடப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவு தார்ச்சாலைகள் அமைப்பதற்கு புதுடில்லியில் உள்ள இந்தியச் சாலை கூட்டமைப்பின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. புதிய ஈரச் செயல்முறை தொழில்நுட்பத்தில் பிளாஸ்டிக் கழிவு தார்ச்சாலைகள் அமைப்பதில், இந்தியாவிலேயே தமிழகம்தான் முன்னோடி. கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மூன்று சாலைகளை இந்த ஈரச் செயல்முறை முறையில் அமைத்துள்ளார்கள். 800 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கிராமப்புறச் சாலைகளிலும் 3200 கிலோ வரையிலான பிளாஸ்டிக் கழிவுகளை மாநில நெடுஞ்சாலைகளிலும் இப்புதியத் தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாகப் பயன்படுத்தலாம். இத்தொழில்நுட்பம் எல்லாவிதமான தட்பவெட்ப நிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது. இப்புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் பிளாஸ்டிக் கழிவு தார்ச்சாலைகள் மிகவும் உறுதியுடனும், இருமடங்கு கூடுதலாக, நீண்ட காலம் உழைக்கக் கூடியதாகவும், கனமழை பெய்தாலும் தாங்கக் கூடிய வகையிலும் இருக்கும். மற்ற சாலைகள் மூன்று ஆண்டுகள் இருந்தால், இந்த ஈரச் செயல்முறையிலான சாலை ஆறு ஆண்டுகள் தாங்கும்.

பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுப்பதற்கு, அவற்றை பயன்படுத்துவதை நிறுத்துவோம், மற்றவரும் அவ்வாறு செயல்பட ஊக்கமளிப்போம். பிளாஸ்டிக் மாசுகேடு பற்றி பறைசாற்றுவோம் மறுசுழற்சி முறையில் நம்மால் மீண்டும் பயன்படுத்த முடியாத பொருள்களைப் புறக்கணித்து விடுவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.