2018-06-02 14:15:00

ஒருமைப்பாடு, பிறரன்புக்கு சான்றுகளாய் விளங்குங்கள்


ஜூன்,02,2018. நோயாளர்களுக்கு உடலளவில் வழங்கப்படும் மறுவாழ்வு நடவடிக்கைகள், ஆன்மீக மறுவாழ்வு நடவடிக்கைகளுடன் இணைந்து நடத்தப்பட முடியும் மற்றும் இணைந்து இடம்பெற வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கேட்டுக்கொண்டார்.

Muscular Dystrophy நரம்புத்தசை சார்ந்த நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வப் பணியாற்றும் UILDM எனப்படும் இத்தாலிய அரசு-சாரா அமைப்பின், ஏறத்தாழ 1,500 உறுப்பினர்கள் மற்றும் நோயாளர்களை, இச்சனிக்கிழமை நண்பகலில், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அமைப்பினர் ஆற்றிவரும் தன்னலமற்ற இலவச சேவைக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

Muscular Dystrophy நோயாளர்களுக்கு, உடலளவில் மிக நெருக்கமாய் இருந்து உதவிகள் வழங்கும்போது, அவர்களின் உடல் வேதனையை மட்டுமன்றி, கைவிடப்பட்ட அல்லது தனிமையில் வாடும் அவர்களின் மனஅளவிலான துன்பங்களுக்கும் ஆறுதல் அளிப்பதாய் இருக்கும் என்றும், திருத்தந்தை கூறினார்.

அன்புகூர்ந்து, அந்த அன்பை வழங்குவதன் வழியாக, ஒருவர், தன்னையே முழுமையாக உணர முடியும் என்பதை, இந்த அமைப்பின் தன்னார்வலர்கள் தங்களின் சேவை அனுபவத்தால் உணர்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, பிறரன்பே, நற்செய்திக்கு சான்று பகர்வதன் மிகச் சிறந்த முறையாகும் என்றும் தெரிவித்தார்.

இந்த அமைப்பினர் ஆற்றும் உதவிகள், குறிப்பாக, அன்புநிறை இதயத்தோடு ஆற்றும் உதவிகள் முக்கியமானது எனவும், அனைவருக்கும், குறிப்பாக, இளையோர்க்கு, வாழ்வின் உடல்பயிற்சி மையமாக இவர்கள் விளங்குகின்றனர் என்றும், திருத்தந்தை கூறினார்.

மிகவும் நலிந்த மக்களின் தேவைகளுக்குத் திறந்தமனதுடன் இருந்து, அவர்களை வரவேற்று, ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் கலாச்சாரத்தில், இந்த அமைப்பினர் இளையோருக்குப்  பயிற்சி அளிக்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, இவர்களின் தன்னலமற்ற அன்புச் சேவைகளை ஊக்குவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட நோயாளர்களுக்கும் தன் அன்பை வெளிப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நரம்புத்தசை சார்ந்த Muscular Dystrophy நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிறிது சிறிதாக சதைக் குறைவால் உடல்மெலிந்து போவார்கள்.

இத்தாலியின் Trieste நகரில், Federico Milcovich என்பவரால், 1961ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட UILDM தன்னார்வ அமைப்பு, தற்போது 77 இடங்களில் பணியாற்றி வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.