2018-06-01 16:04:00

திருத்தந்தை–விளையாட்டு, ஒன்றிப்பு மற்றும் சந்திப்பின் இடம்


ஜூன்,01,2018. ஒரு பொதுவான நோக்கத்தை எட்டுவதற்காக, எல்லாவிதமான சமூக நிலைகளிலுள்ள மக்கள் சந்திக்கும் இடமாக, விளையாட்டு அமைந்துள்ளது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறினார்.

“உங்களிடமுள்ள சிறந்தவற்றை அளியுங்கள்” என்ற தலைப்பில், விளையாட்டு மற்றும் மனிதர் பற்றிய கிறிஸ்தவ கண்ணோட்டம் பற்றிச் சொல்லும், புதிய ஏடு ஒன்றை, திருப்பீட பொதுநிலையினர், குடும்பம் மற்றும் வாழ்வு அவை வெளியிட்டுள்ளதையடுத்து, அந்த அவையின் தலைவர் கர்தினால் Kevin Farrell அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தனிமனிதக் கோட்பாடும், இளைய தலைமுறைகளுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் இடையே நிலவும் இடைவெளியும் ஆதிக்கம் செலுத்துகின்ற இன்றைய கலாச்சாரத்தில் விளையாட்டின் மதிப்பு பற்றி தெளிவாக்கியுள்ள திருத்தந்தை, இனம், மதம், கருத்தியல், பாலினம் போன்ற வேறுபாடுகளின்றி, அனைத்து மக்களும் சந்திப்பதற்கு வாய்ப்பளிக்கும் இடமாக, விளையாட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் பகிர்ந்துகொள்ளப்படும்வேளை, ஓர் அணியாக, ஓர் இலக்கை ஒன்றுசேர்ந்து அடைவதற்காகப் போட்டியிடும் மகிழ்வை, விளையாட்டில் அனுபவிக்கின்றோம் என்றும், தங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தி வெற்றிபெறும் ஒரு கருத்தை இது புறக்கணிக்கின்றது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார். 

ஒவ்வொருவரும் தங்களிடமுள்ள சிறந்தவற்றை வழங்குவதற்கு உதவும் குழு உணர்வு, விளையாட்டில் தேவைப்படுகின்றது என்றும், ஒரு தந்தை தன் மகனோடு விளையோடும்போதும், பூங்காவில் அல்லது பள்ளியில் சிறார் ஒன்றுசேர்ந்து விளையாடும்போதும், விளையாட்டு வீரர் தனது ஆதரவாளர்களோடு சேர்ந்து வெற்றியைக் கொண்டாடும்போதும் போன்ற எல்லாச் சூழல்களிலும், விளையாட்டை, மக்களிடையே இடம்பெறும் ஒன்றிப்பு மற்றும் சந்திப்பின் இடமாக மதிக்கிறோம் என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

விளையாட்டு, இளையோருக்கு உருவாக்கும் கருவியாக உள்ளது என்றும், மனத்தாராளம், தாழ்ச்சி, தியாகம், விடாஉறுதி, மகிழ்ச்சி ஆகிய பண்புகளால், விளையாட்டு வீரர்கள் எடுத்துக்காட்டாய் இருக்கின்றனர் என்றும், அவர்கள், பிறரோடு ஒருமைப்பாடு மற்றும், நலமான போட்டி மனப்பான்மையை மதிக்கும் குழு உணர்வை வெளிப்படுத்துகின்றனர் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

ஒவ்வொரு தருணமும், அது வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும், கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதற்கு,  விளையாட்டு நல்ல வாய்ப்பாக உள்ளது என்றுரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விளையாட்டு, மறைப்பணி மற்றும் புனிதத்துவத்திற்கு கருவியாக அமைய வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.