2018-06-01 16:22:00

சிலே பாலியல் முறைகேடுகள் பற்றி திருப்பீட செய்தி தொடர்பகம்


ஜூன்,01,2018. “அன்பு, மோசமான சூழல்களிலும் நல்லவைகளைக் காணும் இயல்பைக் கொண்டது. அன்பு, இருள்சூழ்ந்த இரவிலும்கூட, ஒரு சிறிய சுடரை ஒளிரச் செய்கின்றது” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளிக்கிழமையன்று வெளியாயின.

மேலும், ஆஸ்ட்ரியா மற்றும், செக் குடியரசின் எல்லையிலுள்ள, ஜெர்மனியின் Baviera மாநிலத் தலைவர் Markus Söder, சிரியாவின் அந்தியோக்கியாவின் முதுபெரும்தந்தை   Ignace Youssif III Younan, ஆஸ்திரேலியாவின் திருப்பீட தூதர் பேராயர் Adolfo Tito Yllana ஆகியோரை, இவ்வெள்ளி காலையில் திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிலே நாட்டு ஆயர்களுக்கு உறுதியளித்துள்ளது போன்று, அந்நாட்டின் அனைத்து இறைமக்களுக்குமென, கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை, சிலே ஆயர் பேரவைத் தலைவருக்கு அனுப்பவிருக்கிறார் என, திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்துள்ளது.

சிலே நாட்டில், அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களை, ஜூன் 1, இவ்வெள்ளிக்கிழமை முதல், ஜூன் 03, வருகிற ஞாயிறு வரை, வத்திக்கானில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்திக்கிறார் எனவும், திருப்பீட செய்தி தொடர்பகம் மேலும் அறிவித்தது.

அதேநேரம், சிலே நாட்டு அருள்பணியாளர் Fernando Karadima மற்றும் அவரைப் பின்பற்றியவர்களால் நடத்தப்பட்ட பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தொடர்ந்து விசாரிப்பதற்கு, பேராயர் Charles Scicluna, பேரருள்திரு Jordi Bertomeu ஆகிய இருவரும் மீண்டும் சிலே செல்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.