மே,31,2018. சீனாவின் ஹெபெய் மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ள Xuanhua வாரிசு ஆயர் Augustine Cui Tai அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென, ஹாங்காங் நீதி மற்றும் அமைதி அவை, சீன அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
இவ்வாண்டு ஏப்ரல் மாத மத்தியில், சீன அரசு அதிகாரிகளால் பிடித்துச் செல்லப்பட்ட ஆயர் Cui அவர்கள், எங்கு இருக்கின்றார் என்பது இதுவரை தெரியவில்லை எனக் கூறியுள்ளது, ஹாங்காங் நீதி மற்றும் அமைதி அவை.
திருப்பீடத்தால் அங்கீகரிக்கப்பட்ட, சீனாவில் மறைந்துவாழும் திருஅவையைச் சேர்ந்தவரான ஆயர் Cui அவர்கள், விடுதலை செய்யப்படுவதற்கு, ஹாங்காங்கின் முன்னாள் ஆயர், கர்தினால் ஜோசப் ஜென் அவர்களும் தன் ஆதரவை வெளியிட்டுள்ளார்.
ஆயர் Cui அவர்கள், விசுவாசம் மற்றும் மனச்சான்றின் சுதந்திரத்திற்காக குரல்கொடுத்து வருவதால், அவர் நீண்டகாலமாக அடக்குமுறைக்கு உள்ளாகி வருகிறார். மேலும், சீன அரசின் சமயக் கொள்கைகள், விசுவாசக் கோட்பாடுகளை மீறுவதாக இருப்பதால், அவற்றையும் ஆயர் புறக்கணித்து வருகிறார் என ஆசியச் செய்தி கூறுகின்றது.
ஆயர் Cui அவர்கள், சட்டத்திற்குப் புறம்பேயான மறைப்பணி நடவடிக்கைகளை ஆற்றுகிறார் என குற்றம் சாட்டப்பட்டு, 1993ம் ஆண்டு முதல், கட்டாய வேலை, தடுப்பு முகாம், வீட்டுக்காவல், மறுகல்வி போன்ற தண்டனைகளை, அவர் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |