2018-05-30 16:47:00

மறைக்கல்வியுரை : தூய ஆவியை முத்திரையாக பொறிக்கப்பட்டுள்ளோம்


மே,30,2018. உரோம் நகரில் கோடைகாலத்தின் சுவடுகள் தெளிவாகத் தெரியத் துவங்கி, வெப்பத்தின் அளவு அதிகரித்து வந்தாலும், புதன் மறைக்கல்வி உரையை செவிமடுக்க வந்த கூட்டத்தினைக் கருத்தில் கொண்டு, இவ்வாரமும் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திலேயே திருப்பயணிகளைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கடந்த வாரத்தின் தொடர்ச்சியாக, உறுதிப்பூசுதல் குறித்து தன் கருத்துக்களை வழங்கினார் திருத்தந்தை.

அன்பு சகோதர சகோதரிகளே, திருமுழுக்கின் அருளை நிறைவாக்கவும், திருநற்கருணையை நோக்கி நம்மை அழைத்துச் செல்லவும் உதவும் நோக்கிலான மேலும் ஓர் ஆன்மீக அர்ச்சித்தலே உறுதிப்பூசுதல் ஆகும். நாம் திருமுழுக்கில் வழங்கிய வாக்குறுதிகளை நம் நினைவுக்குக் கொணர்ந்து அவைகளைப் புதுப்பிப்பதுடன், தூய ஆவியின் கொடைகளை வாரி வழங்குவதையும் வேண்டுகிறது உறுதிப்பூசுதல் வழிபாட்டுமுறை. இயேசு, மெசியாவுக்குரிய மறைப்பணியை எடுத்து நடத்துவதற்கு உதவும் வகையில், அவரின் திருமுழுக்கின்போது, தூய ஆவியாரின் அருட்கொடை பொழிதலை அவர் பெற்றதைப்போல், இயேசுவின் திருஉடல், ஒன்றிப்பிலும் மறைப்பணி ஆர்வத்திலும் வளர்வதற்கு நாம் உதவும் வகையில், தூய ஆவியாரின் கொடைகளும் கனிகளும் நமக்கு வழங்கப்பட வேண்டும் என திருஅவை செபிக்கிறது. கைகளை வைப்பது, மற்றும், திருஎண்ணெயால் அர்ச்சிப்பது என்பதன் வழியாக, தூய ஆவியின் கொடைகள் உணர்த்தப்படுகின்றன. இந்த அருளடையாளத்தின் அறிகுறிகள் குறித்த அர்த்தங்களில் ஒளியைப் பாய்ச்ச வரும் தூய பவுல், கடவுளே...... நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார். அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார்(2 Cor 1:21-22) என உரைக்கிறார். தூய ஆவியை முத்திரையாக பதிக்கப்பட்டுள்ள நாம், கிறிஸ்துவுக்கு மிக நெருக்கமாக கொணரப்பட்டு, இவ்வுலகில் அவருக்கு சான்று பகர பலம் பெற்றுள்ளோம். உறுதிப்பூசுதலின்போது பெற்ற கொடைகளுக்கு நன்றி நவில்வதில் நாம் வளர்வோமாக. மேலும், அனைத்தையும் புதியனவாக்கும் தூய ஆவியாரின் படைப்பாற்றலுக்கு, நம் இதயங்களை முழுவதுமாக மேலும் சிறப்பான விதத்தில் திறந்து செயல்படுவோமாக.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.