2018-05-30 16:57:00

திருத்தந்தை, மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் பிரதிநிதிகள் குழு சந்திப்பு


மே,30,2018. கத்தோலிக்கத் திருஅவை, பிரிவினை எண்ணத்தை ஒருபோதும் அனுமதிக்காது மற்றும், இதற்கு ஒருபோதும் வாய்ப்பளிக்காது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை குழுவிடம் இப்புதன்கிழமையன்று கூறினார்.

இப்புதன் காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகளுக்குப் பொதுமறைக்கல்வியுரை வழங்குவதற்குமுன்னர், அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள ஓர் அறையில், மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தையின் பிரதிநிதிகள் இருபது பேரைச் சந்தித்து,  தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை குழுவினர் வத்திக்கான் வந்ததற்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது ஒன்று சேர்ந்து நடப்பது என்றும், இறையியலைத் தொடர்ந்து படித்து, கருத்துக்களில் தெளிவுகாண வேண்டுமென்றும் கூறியத் திருத்தந்தை, உரையாடலில் ஒருவர் ஒருவருக்காகச் செபிப்பது, நிறைய நன்மைகள் பயக்கும் எனவும் கூறினார். இத்தாலிய ஆயர் பேரவையின் அழைப்பின்பேரில் உரோம் வந்துள்ள, இந்த ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை குழு, கடந்த சில நாள்களாக, சில சந்திப்புக்களை நடத்தி வருகிறது.

மேலும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் புதிய மறைசாட்சிகள் மற்றும் புனிதர்கள் பற்றிய அருங்காட்சியகம் ஒன்று, மே 30, இப்புதன்மாலையில், உரோம் இலாத்தரன் மாளிகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தையின் பிரதிநிதி Pskov பேராயர் Tikhon (Ševkunov), திருப்பீட கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசி ஆகிய இருவரும் இந்நிகழ்வில் முக்கிய பிரதிநிதிகளாக கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.