2018-05-30 16:03:00

சாம்பலில் பூத்த சரித்திரம்: முதல் 300 ஆண்டுகளில் திருஅவை - 1


மே,30,2018. இயேசுவின் உயிர்ப்புக்குப்பின்னர் முதல் மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், பல்வேறு சமூக மற்றும் பொருளாதார கலாச்சாரங்களில், வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தினர். இவை, உலக வரலாற்றில் அமைதியான வழியில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் என சொல்லப்படுகின்றது. இக்கிறிஸ்தவர்களின் வாழ்வுமுறை என்ன? அவர்களின் நம்பிக்கை என்ன? அவர்களுக்கு இவை எப்படி சாத்தியமானது? எனச் சந்திக்கத் தோன்றுகிறது. தொடக்ககாலத் திருஅவையில் பிரச்சனைகளும், உட்பூசல்களும் இருந்தன. ஆயினும், கிறிஸ்தவர்கள், ஏனையோருக்கு வித்தியாசமானவர்களாகவே தெரிந்தனர். அவர்களின் வாழ்க்கைமுறை, அவர்களை பின்பற்றியவர்களையும், அவர்களைக் கடுமையாய் வதைத்தவர்களையும் கவர்ந்தது. கிறிஸ்தவ மெய்யியலாளரும், கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கொல்லப்பட்டவருமான புனித ஜஸ்டின், ஏறக்குறைய கி.பி.150ம் ஆண்டில், உரோமைப் பேரரசர் அந்தோனியுஸ் பயஸ் என்பவருக்கு கிறிஸ்தவர்களுக்குச் சார்பாக ஒரு கடிதம் எழுதினார். அதை வாசிக்கும்போது, கிறிஸ்தவர்கள், தங்கள் நம்பிக்கைக்காக கொல்லப்படுவதை எவ்வளவு தூரம் வரவேற்றார்கள், அதேநேரம், தங்கள் விசுவாசத்தை எவ்வளவு துணிச்சலுடன் அறிவித்தார்கள், நீதிக்காக குரல் எழுப்பினார்கள் எனத் தெரிகிறது. ஏறத்தாழ கி.பி. நூறாம் ஆண்டில், பாலஸ்தீனாவின் சமாரியாவில் பிறந்த மறைசாட்சி ஜஸ்டின் அவர்கள், பேரரசருக்கு இவ்வாறு எழுதியுள்ளார் 

 பக்தியுள்ளவர்கள், மெய்யியலாளர்கள், நீதியின் காவலர்கள், அறிவை அன்புகூர்பவர்கள் என்றெல்லாம் உங்களை நீங்கள் அழைத்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக இப்படி நான் சொல்லவில்லை. எனவே நான் சொல்வதற்கு கவனமுடன் செவிகொடுங்கள். கிறிஸ்தவர்களைத் தீர்ப்பிடுவதற்குமுன்னர், அவர்கள் பற்றிய சரியான புலன்விசாரணைகளை நடத்துங்கள். கிறிஸ்தவர்களாகிய நாங்கள் கொடியவர்கள், தீமை செய்தவர்கள் என்று நிரூபிக்கப்படும்வரை, எங்களுக்கு எதிராக எந்தத் தீமையும் செய்யப்படக் கூடாது என விரும்புகின்றோம். நீங்களும் எங்களைத் துன்புறுத்த இயலாது. நான் கூறுவது, அறிவுக்கெட்டாத மற்றும் முட்டாள்தனமான அறிக்கை என்று யாரும் நினைப்பதைத் தவிர்ப்பதற்காக இவ்வாறு எழுதுகிறேன். கிறிஸ்தவர்களுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், நாங்கள் நீதியின்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் தீமையான வதந்திகளால், குற்றமற்ற மனிதரைத் தீர்ப்பிடுவது சரியான காரணமல்ல. அவ்வாறு நீங்கள் செய்தால், அறிவால் நிர்வாகம் செய்வதைவிட, உணர்ச்சிகளால் நிர்வாகம் செய்து உங்களையே வருத்திக்கொள்கிறீர்கள். எனவே எங்கள் வாழ்வையும், எங்கள் போதனைகளையும் ஆய்வு செய்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமெனக் கேட்பது எங்கள் கடமையாகும். இதைக் கேட்கும்போது, நீங்கள் நல்ல நீதிபதிகளாக இருந்து எங்களை விசாரிப்பது உங்கள் கடமையாகும். நீங்கள் உண்மையைக் கற்றிருக்கும்போது, நீதி என்ன என்பதை நீங்கள் ஆற்றாவிட்டால், கடவுள் முன்னிலையில் நீங்கள் மன்னிக்கப்பட மாட்டீர்கள்

தொடக்ககால கிறிஸ்தவர்கள், பேரரசரிடம் அச்சமின்றி நீதிக்காக எவ்வாறு குரல் எழுப்பினார்கள் என்பதற்கு மறைசாட்சி ஜஸ்டின் அவர்களின் கடிதமே ஒரு சாட்சி. தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கு, கி.பி.130ம் ஆண்டில், Diognetesக்கு எழுதிய மடல் ஒன்றே போதுமானது. இக்கிறிஸ்தவர்கள், நாடு, மொழி, பழக்கவழக்கம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து எல்லாரும் ஒன்றாய், ஒரு சமூகமாய் வாழ்ந்து வந்துள்ளார்கள். தங்கள் தங்கள் நாடுகளில் வாழ்ந்தாலும், தங்களிடம் இருப்பதை மற்றவரோடு பகிர்ந்து வாழ்ந்தார்கள். தங்களிடம் இருப்பவைகளை தங்களுக்கு உரியவை அல்ல எனக் கருதினார்கள். மற்ற நாடுகள் ஒவ்வொன்றும் அவர்களின் சொந்த நாடாகவே கருதப்பட்டது. அவர்கள் பிறந்த நிலம், அந்நியமாகவே இருந்தது. மற்ற நாடுகளில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்களை மதித்தார்கள். மற்றவர்களைப்போல், அவர்களும் திருமணம் புரிந்து குடும்பம் நடத்தினார்கள். பிள்ளைகளைப் பெற்றார்கள். ஆனால் கருவிலே பிள்ளைகளை அழிக்கவில்லை. இவ்வுலகில் வாழ்ந்தாலும், விண்ணுலகின் குடிமக்கள் என்ற உணர்வில் வாழ்ந்தார்கள். நாட்டின் சட்டங்களை மதித்தார்கள். அனைத்து மனிதரையும் அன்புகூர்ந்தார்கள். அதேநேரம், அனைவராலும் சித்ரவதைக்கும், அவமதிப்புக்கும் உள்ளானார்கள். கொலைசெய்யப்பட்டார்கள். ஆனால் விண்ணக வாழ்வை ஆதாயமாக்கிக் கொண்டார்கள். ஏழைகளாக இருந்தார்கள், ஆனால் பலரைச் செல்வராக்கினார்கள், அனைத்துப்பொருள்களும் இல்லாமல் இருந்தார்கள், ஆயினும் எல்லாவற்றையும் அளவுக்கு அதிகமாய்க் கொண்டிருந்தார்கள். பழித்துரைக்கப்பட்டார்கள், ஆனால் அவர்கள் மற்றவரை ஆசீர்வதித்தார்கள். நல்லது செய்தார்கள், ஆயினும் தீயவர்களால் தண்டனைக்கு உள்ளானார்கள். 

உடலுக்கு ஆன்மா எவ்வளவு முக்கியமோ அதேபோல், இந்த உலகிற்கு தொடக்ககால கிறிஸ்தவர்கள் முக்கியமானவர்களாக இருந்தனர் என ஏடுகள் கூறுகின்றன. கிறிஸ்தவம் உலகில் பரவத்தொடங்கி இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆண்டுகள் ஆகியும் இக்காலத்திலும் எண்ணிக்கையின்றி கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர் என்பது கவலை தரும் செய்தி. மேலும், வட ஆப்ரிக்காவில் கி.பி.165ம் ஆண்டு முதல் 225ம் ஆண்டுவரை வாழ்ந்தவர், தொடக்ககால கிறிஸ்தவ வல்லுனர் தெர்த்தூலியன். இவர், கி.பி.197ம் ஆண்டில் கிறிஸ்தவர்களின் விசுவாசம் பற்றி மிக அருமையாக எழுதியிருக்கிறார். இவர்கள், ஒருவரை ஒருவர் எப்படி அன்புகூர்கின்றார்கள் எனப் பாருங்கள் என, கிறிஸ்தவர்கள் பற்றிச் சொல்கிறார் தெர்த்தூலியன். ஆம். கிறிஸ்தவர்கள் எல்லாரும் இயேசு தம் சீடர்களுக்கு விட்டுச்சென்ற அன்புக்கட்டளையை வாழ அழைக்கப்பட்டிருப்பவர்கள். ஒவ்வொரு கிறிஸ்தவரும், தன்னை அன்புகூர்வதுபோல் பிறரையும் அன்புகூர வேண்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.