2018-05-29 15:54:00

மியான்மாரின் அமைதிக்காக கச்சின் மாநில கத்தோலிக்கர்


மே,29,2018. மியான்மாரின் கச்சின் மாநிலத் தலைநகர் Myitkyinaல், இத்திங்களன்று, ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர் பேரணி நடத்தி, மியான்மாரில் அமைதி நிலவ விண்ணப்பித்தனர்.

Myitkyina ஆயர் Francis Daw Tang அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில், கத்தோலிக்கர் மட்டுமல்லாமல், பிற கிறிஸ்தவ சபையினரும், பிற சமயத்தவரும் கலந்துகொண்டனர் என ஆசியச் செய்தி கூறுகிறது.

கடந்த ஏப்ரலில், மியான்மார் இராணுவத்திற்கும், கச்சின் விடுதலைப் படையின் புரட்சியாளர்களுக்கும் இடையே தொடங்கிய மோதல்களில், ஆயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்தனர். ஆனால் 150 பேர் மட்டுமே, புலம்பெயர்ந்தவர் முகாமில் அனுமதிக்கப்பட்டனர்.

இம்மோதல்கள் பற்றிக் கூறிய கிறிஸ்தவர்கள், கச்சின் பகுதியில், ஓர் உண்மையான இன அழிப்பு இடம்பெற்று வருகின்றது எனக் கூறியுள்ளவேளை, கச்சினில், ஓர் அக்கறையற்ற மனிதாபிமான நெருக்கடி நிலவுகின்றது என, ஐ.நா. நிறுவனம் கூறியுள்ளது.

வட மியான்மாரில் வாழ்கின்ற கச்சின் இனத்தவரில் பெரும்பான்மையினோர் கிறிஸ்தவர்கள். இவர்களில், 40 விழுக்காட்டினர் கத்தோலிக்கர் மற்றும் 60 விழுக்காட்டினர் பாப்பிஸ்ட் சபை கிறிஸ்தவர்கள். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.