2018-05-29 16:05:00

கடவுளை அறிவிக்கும் மனிதர் முதலில் மனிதம் உள்ளவராக...


மே,29,2018. சிறப்பு மறைப்பணி மாதமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ள, 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம், உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கவேண்டிய திருஅவையின் பணி குறித்த விழிப்புணர்வைப் புதுப்பிப்பதற்கு உதவுவதாய் அமைகின்றது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

உரோமையில், இத்திங்களன்று ஆண்டு கூட்டத்தை தொடங்கியுள்ள, பாப்பிறை மறைப்பணி கழகங்களில் தொடக்கவுரையாற்றிய, திருப்பீட நற்செய்தி அறிவிப்பு பேராயத் தலைவர், கர்தினால் பெர்னான்டோ ஃபிலோனி அவர்கள் இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டு அக்டோபர் மாதத்தை, சிறப்பு மறைப்பணி மாதமாக அறிவித்துள்ளதன் நோக்கம் பற்றி விவரித்த கர்தினால் ஃபிலோனி அவர்கள், Maximum Illud என்ற திருமடலில், திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், உலகில், திருஅவையின் நற்செய்தி அறிவிப்புப் பணி, நற்செய்தியின் அடிப்படையில் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசினார். கடவுளை அறிவிக்கும் மனிதர் முதலில் அவர் மனிதம் மிக்கவராக இருக்க வேண்டும் என்று, Maximum Illud திருமடல் குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் ஃபிலோனி அவர்கள், பாப்பிறை மறைப்பணி கழகங்களின் தேசிய இயக்குனர்கள் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

2019ம் ஆண்டு அக்டோபர் சிறப்பு மறைப்பணி மாதம், பாப்பிறை மறைப்பணி கழகங்களின் அமைப்புமுறைகளில் சீரமைப்பு கொண்டுவரப்பட வேண்டியதன் அவசியத்தை துணிச்சலுடன் நோக்குவதற்கு நல்ல வாய்ப்பாக உள்ளது என்றும், கர்தினால் ஃபிலோனி அவர்கள் கூறினார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.