2018-05-28 15:54:00

வாரம் ஓர் அலசல் – பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவோம்


மே,28,2018. சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) அவர்கள், ஒரு சமயம், ஒரு பத்திரிகையில் தன் அப்பாவிடமிருந்து கிடைத்த மூன்று பாடங்கள் என இவ்வாறு பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஒருநாள் என் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின்மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது. இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார்... `கண்ணு... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக்கொள்!’ என்றார். அந்த நாள்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டு, விழாக்கள் இவை போன்ற சமயங்களில்தான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய அறிவார்ந்த முடிவுக்காக என்னை நானே பாராட்டிக் கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்தபோது எனக்கு வியப்பு. ஏனெனில் அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப் பார்த்துவிட்டு நான் மிகவும் வருந்தினேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக்கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார். `மகனே நினைவில் வைத்துக்கொள்... உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத்தான்.

அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின்மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது.  இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார்... ``மகனே... உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக்கொள்!’ இந்த முறை நான் கொஞ்சம் அறிவுடன் சிந்தித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக்கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டைகூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார்... `மகனே... எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக்கூடும், தந்திரத்தில் விழவைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள். இதை எந்தப் பாடநூல்களிலிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது.’

மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார். வழக்கம்போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை. மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார்... `மகனே நீயே தேர்ந்தெடுத்துக்கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?’ இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்துவிடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன்... `அப்பா நீங்கள்தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள்தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக்கொள்கிறேன்’ என்றேன். அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக்கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன். நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்றுதான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன. அப்போது அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார்... மகனே, நினைவில் வைத்துக்கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும்போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்!’

சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) அவர்கள், தன் அப்பா சொன்ன இந்த மூன்று வாழ்க்கை பாடங்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பதாகவும், அதன்படிதான் நான் செயலாற்றுகிறேன் எனவும், உண்மையைச் சொல்லப்போனால், நான் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறேன் எனவும் சொன்னார். அவர் மேலும் சொன்னார் – நான் சிறு வயதில் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக்கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லாரும் என்னைவிட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய்விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை. மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று பாடங்கள்தான் வாழ்வில் எனக்கு உதவியாக இருந்தன என்று.

இந்தக் கட்டுரையை விகடன் இதழில் வாசித்தபோது, என் பெற்றோர் சொல்லிக்கொடுத்த பாடங்கள் நினைவுக்கு வந்தன. தாயிற் சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை, ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை, அன்னை தந்தையே அன்பின் எல்லை என்ற காலத்தால் அழியாத பாடல் வரிகளைக் கேட்கும்போது, நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கி, இந்நிலைக்கு உயர்த்தியுள்ள பெற்றோரின் தியாகங்களையும், பெருமைகளையும் நினைத்து உருகாதவர் இருக்கமாட்டார்கள். அண்மையில் கேரளாவில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானபோது, ஒரு பள்ளியில் முதல் மதிப்பெண்கள் எடுத்த மாணவியின் பெயர், தேர்ச்சிப் பட்டியலில் இல்லை. எனது தேர்வுத் தாள்கள் காணாமல்போய்விட்டனவோ என்ற கவலையில் அந்த மாணவி கவலையோடு வீட்டிற்கு வந்து மெழுகுதிரி ஏற்றி கண்ணீரோடு செபித்துக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில், 98 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்துள்ளார் என தொலைபேசி செய்தி வந்தது. அதைக் கேட்டவுடன் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து தந்தையிடம் செய்தி சொல்ல ஓடினார் அந்த மாணவி. தந்தையோடு வீட்டிற்குத் திரும்பியபோது அந்த மாணவி செபித்துக்கொண்டிருந்த அறை தீயினால் சேதமடைந்திருந்தது. காரணம் அவசரத்தில் மெழுகுதிரியை அணைக்காமல் சென்றுவிட்டார் மாணவி. ஆனால் அவரின் தந்தை மகளை அணைத்துக்கொண்டு, மகளே, எனக்கு வீடு பெரிதல்ல, நீதான் வேண்டும் என்ற முத்தமழை பொழிந்துள்ளார். 

2013ம் ஆண்டில் வெளியான ஹரிதாஸ் என்ற திரைப்படத்தில், ஆட்டிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்ட தன் மகனை வளர்ப்பதற்கு அந்த தந்தை எடுத்த தியாகங்களைப் பார்க்கிறோம். தாயை இழந்த அந்த மகனின் திறமையைப் புரிந்துகொண்டு, அவனை சமூகத்தில் உயர்த்திக் காட்ட அவர் எடுத்த முயற்சியும் தியாகமும் வீணாகவில்லை. பொதுவாக குடும்பத்தில் அன்னையின் அன்பு பெரிதாகப் பேசப்படும். ஆனால் தந்தையின் திரைமறைவு தியாகம் அதிகம் பேசப்படுவதில்லை. அன்னையிடம் அன்பை வாங்கலாம். தந்தையிடம் அறிவை வாங்கலாம் என்பார்கள். பிள்ளைகளை ஆயுள்வரை நெஞ்சில் சுமக்கும் தந்தை, பாசத்தை வெளிக்காட்டத் தெரியாத முள்ளுக்குள் ரோஜாவாய், பலாப்பழத்தில் பலாச்சுவையாய், நினைக்க நினைக்க நெஞ்சுக்குள் மகிழ்வும் பெருமையும் தருகின்றவர். வாழ்க்கைச் சக்கரத்தில் நாம் வசதியாய் வாழ்வதற்காக ஓயாமல் சுழலும் அன்புச் சக்கரம் தந்தை.  தான் பட்ட கஷ்டம் தன் பிள்ளையும் படக்கூடாது என்று வாயார பேசி, மனமார உழைப்பவர் தந்தை. கண்ணுக்குத் தெரியாத கடவுளைப்போல நம்மை அரவணைத்துக் காக்கும் தந்தையின் பெருமையை மனதால் உணரும்போதுதான் அவரது அன்பு நம் கண்ணுக்குத் தெரியும். விடு விடு வென வாழ்க்கை முழுவதும் விட்டுக்கொடுக்கும் அந்தப் பெரிய உள்ளம்,கடவுள் நமக்களித்த வாழ்க்கை வெள்ளம்.

ஜூன் 01, வருகிற வெள்ளிக்கிழமை, உலக பெற்றோர் தினம்.  பெற்றோரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு, பிள்ளைகளுக்காக அவர்கள் செய்யும் தியாகம் ஆகியவற்றிற்காக, உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும் எனக் கருதி, ஐக்கிய நாடுகள் பொது அவை, 2012ம் ஆண்டில் ஜூன் முதல் தேதியை உலக பெற்றோர் தினமாக அறிவித்தது. உலகளவில் 1980களிலிருந்து, குடும்பங்களின் முக்கியத்துவம் அதிகமாக உணரப்படுகின்றது. அதனால் உலக குடும்பங்களின் நாளையும் ஐ.நா. சிறப்பித்து வருகிறது.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்பதற்கேற்ப, ஒரு காலத்தில், உண்மை உலகின் கடவுளாக நம் பெற்றோரை வணங்கினோம். ஆனால் இக்கால நிலைமை வித்தியாசமாக உள்ளது. பட்டமரத்திற்கு இன்று நேரும் நிலைதான், இப்போதைய பச்சை மரங்களுக்கும் நேரிடும். முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்ட தனது மகனை கவனிக்க தானும் முதியோர் இல்லத்தில் சேர்ந்து மகனுக்குப் பணிவிடைபுரியும் 93 வயது தாயும் உள்ளார். எனவே, பெற்றோருக்கு மகிழ்வைத் தராவிட்டாலும், மனக்கசப்பைத் தராமல் இருக்க முயற்சி செய்வோம். திருவிவிலியத்தில் தந்தை தோபித்து தன் மகன் தோபியாவிற்கு இவ்வாறு அறிவுரை வழங்கினார். மகனே என்னை நல்லடக்கம் செய்; உன் தாயை வாழ்நாள் முழுவதும் கைவிடாதே. உனக்குப் பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதே. குடிபோதைப் பழக்கத்துக்கு ஆளாகாதே. தேவைக்குமேல் உன்னிடம் உள்ளதையெல்லாம் தருமம் செய்துவிடு. தருமம் கொடுப்பதற்கு முகம் கோணாதே. ஞானிகளிடம் அறிவுரை கேள்; பயன் தரும் அறிவுரை எதையும் உதறித்தள்ளாதே. எல்லாக் காலத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவரைப் போற்று; நீ கடவுளுக்கு அஞ்சிப் பாவத்தையெல்லாம் தவிர்த்து, உன் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நல்லது செய்தால், நீ பெரும் செல்வனாவாய்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.