2018-05-26 16:16:00

திருத்தந்தை - உரோம் புறநகர்ப் பள்ளி மாணவர்கள் சந்திப்பு


மே,26,2018. உரோம் புறநகர்ப் பகுதியிலுள்ள எலிசா ஸ்காலா (Elisa Scala) அரசு பள்ளிக்கு, இவ்வெள்ளிக்கிழமை மாலையில், திடீரென சென்று, பள்ளிச்சிறாரையும், அதிகாரிகளையும், பெற்றோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டில் ஆரம்பித்த வெள்ளிக்கிழமை இரக்கச் செயல்களைத் தொடர்ந்து ஆற்றிவருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எலிசா ஸ்காலா அரசு பள்ளிக்குச் சென்று, அங்கு ஏறத்தாழ 200 மாணவர்கள், அவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரைச் சந்தித்து, மாணவர்களுடன் கைகுலுக்கி, அவர்களை முத்தமிட்டு, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

கல்விக்கூடம் என்பது, சந்திப்பு, வளர்ச்சி மற்றும் உருவாக்குதலின் இடம் என்று சொல்லி, பள்ளியின் கடமையை எடுத்துக் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐந்து மாதங்களுக்கு முன்னர், ‘நாங்கள் முன்னோடிகள்’ என்ற நிகழ்வை ஆரம்பித்துள்ள இம்மாணவச் சிறார்க்கு, திருத்தந்தையின் இச்சந்திப்பு ஊக்கமூட்டுவதாய் உள்ளது என்று, பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

1950களில் கட்டப்பட்ட இப்பள்ளியின் பெயர், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர், எலிசா ஸ்காலா பள்ளி என்ற பெயருக்கு மாற்றப்பட்டது. எலிசா ஸ்காலா என்பவர், 2015ம் ஆண்டில், இரத்த புற்று நோயால் இறந்த 11 வயது சிறுமியாவார்.

சிறுமி எலிசா, நூல்கள் மற்றும் நூலகங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதனால், அச்சிறுமியின் இறப்புக்குப் பின்னர், அவரின் பெற்றோர், அச்சிறுமியின் பெயரால் நூலகம் ஒன்றைக் கட்டுவதற்குப் பரிந்துரைத்தனர். இதன் பயனாக, 2015ம் ஆண்டு டிசம்பரில், எலிசா நூலகம் ஆரம்பிக்கப்பட்டது. எலிசாவின் பெற்றோரின் முயற்சியால், தற்போது இந்நூலகத்தில், உலகின் பல பகுதிகளிலிருந்து தானமாக வழங்கப்பட்ட, இருபதாயிரத்திற்கு மேற்பட்ட பல்வேறு மொழிகள் நூல்கள் உள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.