2018-05-26 15:58:00

திருத்தந்தை, முதுபெரும்தந்தை பர்த்தலமேயோ சந்திப்பு


மே,26,2018. இச்சனிக்கிழமை காலையில், வத்திக்கானில், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலமேயோ அவர்களைச் சந்தித்து, ஏறத்தாழ 25 நிமிடங்கள் கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சந்திப்பின் இறுதியில், முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலமேயோ அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் அண்மையில் வெளியிட்ட, 'மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள் (Gaudete et exsultate)' என்ற திருத்தூது அறிவுரை மடல் பிரதியொன்றில் கையெழுத்திட்டு வழங்கினார். முதுபெரும்தந்தை அவர்களும், திருத்தந்தைக்கு, புனித பிரான்சிஸ் அசிசியாரின் இயேசு மரியா படம் ஒன்றை வழங்கினார்.  

மேலும், ஜெர்மனியின் Bundesrat தலைவர் Michael Müller அவர்களையும், பெரு நாட்டு ஆயர் பேரவைத் தலைவரான த்ருஹில்லோ பேராயர் ஹெக்டர் மிகேல் விதார்தே தலைமையிலான, அந்நாட்டு ஆயர் பேரவை பிரதிநிதி குழுவையும்,, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நம் வசதியான வளையத்தைவிட்டு வெளியே வாழ்வதற்கு நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கிறது, ஏனெனில், இயேசுவைப் பின்பற்றும் எவரும் ஏழைகள் மற்றும் தாழ்நிலை உள்ளவர்களை அன்புகூருகின்றனர் என்று கூறியுள்ளார்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற செப்டம்பர் 15ம் தேதியன்று, இத்தாலியின் சிசிலித் தீவிலுள்ள பியாட்சா அர்மெரினா (Piazza Armerina) மற்றும் பலேர்மோ மறைமாவட்டங்களுக்கு, மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அருள்பணி Pino Puglisi அவர்கள் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்பட்டதன் 25ம் ஆண்டு நிறைவையொட்டி திருத்தந்தையின் இப்பயணம் இடம்பெறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.