2018-05-26 15:32:00

திருஅவையின் சமூகப் போதனைகள் பொருளாதார நீதிக்கு உதவி


மே,26,2018. பொருளாதார நீதி, சமத்துவம் மற்றும் எல்லாரையும் ஈடுபடுத்தும் உலகளாவிய கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு, அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளிலுள்ள தலைவர்களின் மனச்சான்றை உருவாக்க எடுக்கப்படும் முயற்சிகளை ஊக்கப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“Centesimus Annus – Pro Pontifice” என்ற பாப்பிறை அமைப்பு தொடங்கப்பட்டதன் 25ம் ஆண்டையொட்டி, ‘புதிய அரசியல் மற்றும் டிஜிட்டல் உலகில் வாழ்வுமுறை’ என்ற தலைப்பில், வத்திக்கானில், மே 24, இவ்வியாழன் முதல், மே 26, இச்சனிக்கிழமை வரை பன்னாட்டு கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஏறத்தாழ 500 பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த 25 ஆண்டுகளாக, இந்த அமைப்பினர் ஆற்றிவரும் பணிகளுக்கு, நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.

கத்தோலிக்கத் திருஅவையின் வளமையான சமூகப் போதனைகள்,  பொருளாதார நீதி, சமத்துவம் மற்றும் எல்லாரையும் ஈடுபடுத்தும் உலகளாவிய கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு, உலகெங்கும் பரப்பப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார், திருத்தந்தை. உலகளாவிய பொருளாதார அமைப்புக்குள் நிலவும் தற்போதைய இன்னல்களும், நெருக்கடிகளும், தன்னலம் மற்றும் மக்களை ஓரங்கட்டும் மனநிலையோடு தொடர்புடையவை என்றும், இவை, மிகவும் நலிந்த மக்களின் மனித மாண்பைப் புறக்கணிக்கும் கலாச்சாரத்தை உருவாக்குகின்றன என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பொருளாதாரத்தில் ஏழ்மையாய் உள்ள நாடுகள் மட்டுமல்லாமல், பொருள்வளம் அதிகரித்துவரும் வளர்ந்த நாடுகளிலுள்ள ஏராளமான நம் சகோதரர், சகோதரிகளின் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்குத் தடைகளாய் இருப்பவைகளையும் நினைத்துப் பார்க்கிறேன் என்று உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Centesimus Annus – Pro Pontifice பாப்பிறை அமைப்பு, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1991ம் ஆண்டு மே, முதல் தேதியன்று வெளியிட்ட, Centesimus Annus அதாவது, நூறாவது ஆண்டில் என்ற திருமடலின் அடிப்படையில், கத்தோலிக்கத் திருஅவையின் சமூகக் கோட்பாடுகளை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இதனை புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1993ம் ஆண்டு ஜூன் 13ம் நாள், கத்தோலிக்க வர்த்தகர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஏனைய நிலையிலுள்ள தலைவர்களைக் கொண்டு தொடங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.