2018-05-26 16:25:00

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு அறிவியலாளர்கள்


மே,26,2018. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி, அமெரிக்க ஐக்கிய நாட்டு கர்தினால் Sean P. O’Malley அவர்கள் தலைமையில், ஐந்நூறுக்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள் மற்றும் சமயத் தலைவர்கள், அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டு, வெளியிட்டுள்ளனர்.

பாஸ்டன் பேராயராகிய கர்தினால் O’Malley அவர்கள், இவ்வாரத்தில் நூற்றுக்கணக்கான சமயத் தலைவர்கள் மற்றும் அறிவியலாளர்களை வழிநடத்தி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டுமென, உலக நாடுகளை விண்ணப்பிக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் அறநெறி வாழ்வோடு தொடர்புடையது என்றும், நம் பொதுவான இல்லமாகிய பூமியைப் பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும், கர்தினால் அழைப்பு விடுத்துள்ளார்.

நம் பொதுவான இல்லமாகிய பூமியைப் பாதுகாப்பதற்கு அழைப்பு விடுக்கும் Laudato Si’ என்ற திருமடலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக, இவ்வாறு செயல்பட்டுள்ளார், கர்தினால் Sean P. O’Malley

அமெரிக்க ஐக்கிய நாட்டின் Massachusetts மாநிலம், 2008ம் ஆண்டில் அங்கீரித்த உலகம் வெப்பமடைவதற்குத் தீர்வு என்ற விதிமுறையின்படி, கார்பன் வெளியேற்றத்தை, 2020ம் ஆண்டுக்குள் 25 விழுக்காடும், 2050ம் ஆண்டுக்குள் 80 விழுக்காடும் குறைக்க வேண்டும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.