2018-05-23 16:57:00

மறைக்கல்வி : தூய ஆவியாரால் திருப்பொழிவு செய்யப்படுகிறோம்


மே,23,2018. வழக்கத்திற்கு மாறாக இவ்வாண்டு, மே மாதத்திலும் குளிரும் அவ்வப்போது மழையும் தொடர்ந்து கொண்டிருந்தாலும், புதன் கிழமைகளில் வானம் தெளிவாக, நல்லதொரு காலநிலையை வழங்கி வருவதால், திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை தூய பேதுரு வளாகத்திலேயே இடம்பெற்று வருகிறது.  கடந்த சில வாரங்களாக, திருமுழுக்கு எனும் அருளடையாளம் குறித்து, தன் கருத்துக்களை திருப்பயணிகளோடு பகிர்ந்துவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், 'உறுதிப்பூசுதல்' என்ற அருளடையாளம் குறித்த தன் மறைக்கல்வித் தொடரைத் துவக்கினார்.

அன்பு சகோதர சகோதரிகளே, பெந்தக்கோஸ்தே நாளில் தூய ஆவியாரின் கொடைக்கான திருஅவையின் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து இந்நாட்களில், உறுதிப்பூசுதல்' எனும் அருளடையாளத்தை நோக்கி நம் மறைக்கல்வி உரை திரும்புகிறது. இவ்வருளடையாளத்தில், நம் திருமுழுக்கின் அருள் உறுதி செய்யப்படுவதுடன், இவ்வுலகின் முன்னால், கிறிஸ்துவுக்குச் சாட்சியாக விளங்கும்படி, தூய ஆவியாரால் திருப்பொழிவு செய்யப்படுகிறோம். இயேசு கிறிஸ்துவும், ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவராக, தூய ஆவியாரால் நிரப்பப்பட்டு, தன் பணிகளை நிறைவேற்றினார். இயேசு, தம் மரணம் மற்றும் உயிர்ப்புக்குப் பின்னர், தன் சீடர்கள் மீது தூய ஆவியைப் பொழிய,  அவர்களும் மாடியறையிலிருந்து புறப்பட்டு, இறைவனின் வல்ல செயல்களை அறிவிக்கச் சென்றனர். யோர்தான் நதியில் திருமுழுக்குப் பெற்றபோது, இயேசு கிறிஸ்து எவ்வாறு தூய அவியாரால் திருப்பொழிவு செய்யப்பட்டாரோ, அதேபோல், பெந்தக்கோஸ்தே நாளின்போது, திருஅவையும், உலகின் இறுதி எல்லைவரை, நற்செய்தியை எடுத்துரைக்கும் தன் பணியை மேற்கொள்ளும் விதமாக, தூய ஆவியைப் பெற்றது. உறுதிப்பூசுதலில், தூய ஆவியாரால் நம்மை நிரப்பி, தந்தையாம் இறைவனின் மீட்புத் திட்டத்திற்கு இயைந்த வகையில், இயேசு, தம் வாழ்வு மற்றும் பணியில் நம்மை பங்குதாரர்களாக மாற்றுகிறார். திருமுழுக்கில் பெற்ற புதிய வாழ்வை முழுமையாக வாழ்வதற்கும், திருஅவையின் பணியை உலகில் மேலும் முன்னேற்றவும், நாம், நம் அனைத்து நடவடிக்கைகள் மற்றும் வார்த்தைகள் வழியாக முயன்றுவரும் வேளையில்,  தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு பணிவோடு ஏற்பவர்களாக எப்போதும் செயல்பட இந்த, 'உறுதிப்பூசுதல்'  அருளடையாளம் நமக்குப் பலம் தருவதாக.

இவ்வாறு, தன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'கிறிஸ்தவர்களின் சகாயம்' என்ற பெயரில் அன்னைமரி விழா, இவ்வியாழனன்று, குறிப்பாக, சீனாவில் சிறப்பிக்கப்படுவதை நினைவூட்டி, சீன நாட்டு மக்களுக்காக செபிக்குமாறு விண்ணப்பம் ஒன்றையும் விடுத்தார். பின்னர் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.