2018-05-21 15:57:00

திருஅவை, அன்னை மரியா போன்று, பெண் மற்றும் அன்னை


மே,21,2018. திருஅவை, பெண்மைப்பண்பைக் கொண்டது, அது ஓர் அன்னை, திருஅவையில் இந்த தனித்துவம் குறையும்போது, அது ஒரு பிறரன்பு நிறுவனம் அல்லது கால்பந்து விளையாட்டு கழகமாக மாறுகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் காலையில் கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவையில், இத்திங்களன்று முதன்முறையாகச் சிறப்பிக்கப்பட்ட, புனித கன்னி மரியா, திருஅவையின் அன்னை என்ற விழா திருப்பலியை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலையில் நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியா போன்று திருஅவை, பெண் மற்றும் அன்னை என்று கூறினார்.

திருஅவை, ஆணுக்குரிய பண்பைக் கொண்டிருக்கும்போது, அது பழைய மணமாகாதவர்களின் திருஅவையாகவும், அன்புகூரவும், இனப்பெருக்க வளமையும் கொண்டிராத திருஅவையாகவும் மாறுகின்றது என்றும், மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.    

புனித கன்னி மரியா திருஅவையின் அன்னை என்ற விழா, தூய ஆவியார் பெருவிழாவுக்கு அடுத்துவரும் திங்களன்று, அகில உலகத் திருஅவையில் சிறப்பிக்கப்பட வேண்டுமென்று, திருத்தந்தையின் விருப்பத்தின்பேரில், கடந்த மார்ச் 3ம் தேதி, திருப்பீட இறைவழிபாடு மற்றும் அருளடையாள பேராயம், "திருஅவையின் அன்னை (Ecclesia Mater)" என்ற விதிமுறையில் அறிவித்தது. இவ்விழா, மேய்ப்பர்கள், துறவறத்தார், விசுவாசிகள் மற்றும் உண்மையான அன்னை மரியா பக்தர்களில், திருவையின் தாய்மைப்பண்பை ஊக்குவித்து, வளர்க்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

மரியின் தாய்மைப் பண்பு பற்றி மறையுரையில் விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியில், மரியா எப்போதும் இயேசுவின் தாய் என்றே குறிப்பிடப்படுகிறார், மாறாக, அவர் திருமதி என்றோ, யோசேப்பின் கைம்பெண் என்றோ குறிப்பிடப்படவில்லை, ஓர் அன்னையின் முதல் பண்பு, கனிவு எனவும் கூறினார்.

பெண்மைப் பண்பைக் கொண்ட திருஅவையே, பெண்ணின் பாதையை நமக்குக் கற்றுக்கொடுப்பதற்காக, தான் பிறப்பதற்கு பெண்ணைத் தேர்ந்தெடுத்த கடவுளின் எண்ணத்தோடு ஒத்திணங்கும் வகையில், பலனுள்ள எண்ணங்களைக் கொண்டிருக்க முடியும் என்றும் உரைத்தார் திருத்தந்தை. அன்னையாக விளங்கும் திருஅவை, கனிவு என்ற பாதை வழியாகச் செல்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.