2018-05-17 16:01:00

புனித பூமி கத்தோலிக்க ஆயர்களின் கண்டன அறிக்கை


மே.17,2018. மே 14 திங்களன்று, புனித பூமியின் காசா பகுதியில் பாலஸ்தீனியர்கள் மேற்கொண்ட போராட்டத்தைத் தடுக்க, இஸ்ரேல் இராணுவம் ஆபத்து நிறைந்த ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இருந்திருந்தால், இத்தனை பேர் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்றும், இத்தனை ஆயிரம் பேர் காயமுற்றிருக்க மாட்டார்கள் என்றும் புனித பூமி கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

எருசலேமில் இயங்கிவரும் இலத்தீன் வழிபாட்டு முறை தலைமையகம், பீதேஸ் செய்திக்கு அளித்த ஓர் அறிக்கையில், காசா பகுதியில் வாழும் 20 இலட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் மீது, இஸ்ரேல் அரசு மேற்கொண்டு வரும் அடக்கு முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று, புனித பூமியில் பணியாற்றும் அனைத்து கத்தோலிக்க ஆயர்களும் இணைந்து கூறியுள்ளனர்.

இதுவரை டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க ஐக்கிய நாட்டு தூதரகத்தை எருசலேம் நகருக்கு மாற்றிய முடிவு, இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளுக்கிடையே ஒருபோதும் அமைதியைக் கொணர முடியாது என்பதையும் கத்தோலிக்க ஆயர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

எருசலேம் நகரம், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், யூதர்கள் என்ற அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவான ஒரு நகரமாக இருக்கவேண்டும் என்று திருப்பீடம் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது என்பதையும், ஆயர்கள் தங்கள் அறிக்கையில் மீண்டும் குறிப்பிட்டுள்ளனர்.

புனித பூமி காவலராக நியமிக்கப்பட்டுள்ள பேராயர் பியர்பத்திஸ்தா பிட்சபாலா அவர்கள் தலைமையில், இலத்தீன், கிரேக்க மெல்கத்திய, ஆர்மேனிய, மாரனைட், கல்தேய மற்றும் சிரிய கத்தோலிக்க ஆயர்கள் அனைவரும் இணைந்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

மார்ச் 30ம் தேதி முதல், மே 14ம் தேதி முடிய, பாலஸ்தீனியர்கள் மேற்கொண்ட பல போராட்டங்களில், இதுவரை, 110 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும், 3000த்திற்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.