2018-05-16 14:55:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : புனித அகுஸ்தீன், தோனாதிசம்


மே,16,2018. அன்று திருத்தூதர் பேதுரு இயேசுவை அணுகி, “ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார். அதற்கு இயேசு “ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன் (மத்.18,21-22) என்றார். திருஅவையின் வரலாறு முழுவதும், இரக்கத்திற்கும், நீதிக்கும் இடையே எப்போதும் ஒரு பதட்டநிலை இருந்து வந்தது. நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில், அல்ஜீரியா நாட்டில், ஹிப்போ நகர் ஆயராகப் பணியாற்றிய புனித அகுஸ்தீனாரின் காலத்தில் இந்த பதட்டநிலை மிக அதிகமாக நிலவியது. மூன்றாம் நூற்றாண்டில், உரோமைப் பேரரசர் தியோக்கிளேசியன் கிறிஸ்தவர்க்கெதிராக நடத்திய கடும் அடக்குமுறைகள் மற்றும் சித்ரவதைகளின்போது, வட ஆப்ரிக்காவின் உரோமை ஆளுனர், தனது பகுதியில் வாழ்ந்த சிறுபான்மை கிறிஸ்தவர்களிடம் கடுமையாய் நடந்துகொள்ளவில்லை. அப்போது, சில ஆயர்களும், அருள்பணியாளர்களும், பொதுநிலை விசுவாசிகளும், தங்களின் விசுவாசத்தை மறுதலிப்பதன் அடையாளமாக, திருமறை நூல்களை ஆளுனரிடம் சமர்ப்பித்தனர். இதில் ஆளுனரும் திருப்தி அடைந்தார். தங்களின் உயிரைக் காத்துக்கொள்வதற்காக இவ்வாறு இவர்கள் நடந்துகொண்டனர். கான்ஸ்ட்டடைன் உரோமைப் பேரரசராக அரியணையில் அமர்ந்த பின்னர், கி.பி.313ம் ஆண்டில், கிறிஸ்தவர்களுக்கெதிரான அடக்குமுறைகள் நிறுத்தப்பட்டன. அச்சமயத்தில், முதலில் கிறிஸ்தவத்தை மறுத்தலித்தவர்கள், தங்களை மீண்டும் திருஅவையில் அனுமதிக்குமாறு அடிக்கடி விண்ணப்பித்து வந்தனர். இப்படிக் கேட்பவர்களை என்ன செய்யலாம் என்ற கேள்வி திருஅவையில் எழுந்தது.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனம் வருந்துபவர் மீண்டும் கத்தோலிக்கத் திருஅவையில் சேர்க்கப்பட்டனர். திருஅவையின் தொடக்க காலங்களில், பெரும் குற்றங்கள் புரிந்தவர்கள், தங்களின் கடுமையான பாவங்களுக்காக பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும். மனம்வருந்தும் பாவிகள், ஆலயக் கதவுகளுக்கு வெளியே நின்று, ஆலயத்திற்குள் செல்பவர்களிடம், தங்களுக்காகச் செபிக்குமாறு கெஞ்ச வேண்டும். பின்னர், அவர்கள் திருவழிபாட்டின்போது ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டு முழங்காலில் இருப்பார்கள். பின்னர் அவர்கள் ஏனைய விசுவாசிகளுடன் சேர்ந்து, எழுந்து நிற்க வைக்கப்படுவர். திருநற்கருணையும் வாங்குவதற்கு அனுமதிக்கப்படுவர். கிறிஸ்தவர்களுக்கெதிராக அடக்குமுறைகள் இடம்பெற்ற காலத்தில் பிறந்தவர்கள் மற்றும் தங்கள் வாழ்வுக்காக விசுவாசத்தை மறுதலித்த கத்தோலிக்கரை மீண்டும் இணைத்துக்கொண்ட திருஅவையின்  தாராளப் பண்பு சிலரை திடுக்கிட வைத்தது. அச்சமயத்தில், வட ஆப்ரிக்கத் திருஅவையின் தலைவராகப் பணியாற்றிய கார்த்தேஜ் ஆயர் தோனாதுஸ் (Donatus) அவர்கள், கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலித்தவர்கள், மீண்டும் திருமுழுக்குப் பெற்று,  கத்தோலிக்க திருஅவையில் அனுமதிக்கப்படலாம், ஆனால், அடக்குமுறைகளின்போது விசுவாசத்தை மறுதலித்த அருள்பணியாளர்கள், அருளடையாளங்களை நிறைவேற்ற முடியாது எனப் போதித்தார். அருள்பணியாளர்களின் அதிகாரங்கள், அவர்களின் அலுவலோடு ஒன்றிணைந்தவை. அவர்களின் தகுதியற்ற அறநெறி செயல், அவர்கள் நிறைவேற்றும் அருளடையாளங்களின் தகுதியைப் பாதிக்கக் கூடாது. இது திருஅவையின் கோட்பாட்டுக்கு அவசியம் என்று கருதுகிறேன். இல்லாவிடில், ஒவ்வோர் அருள்பணியாளரும், ஆயரும், தூய வாழ்வு வாழ்கின்றனரா, அவர்கள் நிறைவேற்றும் அருளடையாளங்கள் தகுதியானவையா என்ற கவலை ஒவ்வொரு நேரமும், தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் என்று ஆயர் தோனதுஸ் போதித்தார்.

கி.பி.313ம் ஆண்டில், திருத்தந்தை மில்தியாதெஸ் (Miltiades) அவர்கள், ஆயர் தோனதுஸ் அவர்களின் போதனைகளைக் கண்டித்தார். இதனை ஏற்காத ஆயர் தோனதுஸ், தனது கொள்கையின் அடிப்படையில், வட ஆப்ரிக்கா முழுவதும் தனது திருஅவையை உருவாக்கினார். வட ஆப்ரிக்காவில் பல நகரங்களிலும், மாநகரங்களிலும், கத்தோலிக்க ஆலயங்களும், தோனதுஸ் ஆலயங்களும் இருந்தன. வட ஆப்ரிக்காவின் ஹிப்போவில் ஆயராகப் பணியாற்றிய புனித அகுஸ்தீனார், தன் மறையுரைகள் மற்றும் எழுத்துக்களால், தோனதுஸ் கொள்கையாளர்களுக்கு எதிராகப் போராடினார். கி.பி.411ம் ஆண்டில், கார்த்தேஜ் நகரில், உரோமைப் பேரரசின் அதிகாரியும், புனித அகுஸ்தீனாரின் நண்பருமான மார்செலினுயுஸ் (Marcellinus)  முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. அதில், கத்தோலிக்க மற்றும் தோனாதிசக் கொள்கை ஆயர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தின் பயனாக, தோனாதுஸ், உரோமைப் பேரரசால் தடை செய்யப்பட்டார். விசுவாசமில்லாதவரிடமிருந்து விசுவாசத்தைப் பெறுபவர், விசுவாசத்தைப் பெறுவதில்லை, மாறாக, மனஉறுத்தலைப் பெறுகின்றார் என, தோனாதுசிச ஆயர் Petitilian இக்கூட்டத்தில் வாதிட்டார். அதற்கு புனித அகுஸ்தீனார், ஒரு விசுவாசியிடமிருந்து அல்லது விசுவாசமற்ற திருப்பணியாளரிடமிருந்து ஒருவர், திருமுழுக்கு அருளடையாளத்தைப் பெறும்போது, அந்த மனிதரின் முழு நம்பிக்கையும்            கிறிஸ்துவில் உள்ளது. எனவே, மனிதரில் தன் நம்பிக்கையை வைப்பவர் சபிக்கப்படுவர் என்ற கண்டனத்தின்கீழ் வரமாட்டார். திருமுழுக்குப் பெறுபவர் எப்போதும் தனது விசுவாசத்தை கிறிஸ்துவிடமிருந்து பெறுகிறார் என வாதிட்டார்.

திருஅவையின் ஆரம்ப காலத்திலே, பிரச்சனைகளை ஏற்படுத்திய அருள்பணியாளர்கள் இருந்திருக்கின்றனர். எனினும் மனிதரின் பாவநிலை ஒருபோதும் கடவுளின் வல்லமையோடு போட்டிபோட முடியாது. அவர்கள் எவ்வளவு தடை போட்டாலும், கடவுளின் விருப்பம் எப்போதும் வித்தியாசமானதாகவே உள்ளது. மனிதரின் பாவங்கள் மற்றும் குறைகள் இருந்தபோதிலும், கிறிஸ்துவின் திருஅவை தனது மறைப்பணியை தொடர்ந்து குறையாது நிறைவேற்றி வருகின்றது எனச் சொல்லலாம். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.